ADDED : பிப் 08, 2024 01:31 AM
சென்னை:சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தில், கடந்தாண்டு ஜூனில், அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில், ஜன., 22ல் குற்றச்சாட்டுகள் பதிவுக்கு தேதி நிர்ணயிக்கப்பட்டது.
அப்போது, 'அமலாக்கத் துறை தாக்கல் செய்த இந்த வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும்' என, செந்தில் பாலாஜி சார்பில், புதிய மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவுக்குபதிலளித்து, அமலாக்கத் துறை சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், 'வழக்கு விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கில், இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நேற்று, நீதிபதி எஸ்.அல்லி முன் விசாரணைக்கு வந்தது. செந்தில் பாலாஜி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மற்றும் அமலாக்கத் துறை சார்பில், அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆஜராகி வாதிட்டனர்.
இரு தரப்பு வாதங்களுக்கு பின், இந்த மனு மீது வரும், 15ல் தீர்ப்பு பிறப்பிக்கப்படும் என, நீதிபதி எஸ்.அல்லிஉத்தரவிட்டார்.
பின், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை, 19வது முறையாக, வரும் 15 வரை நீட்டித்தும் உத்தரவிட்டார்.

