ஊரக உள்ளாட்சிகளிலும் இனி மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் ஜோதி நிர்மலா சாமி தகவல்
ஊரக உள்ளாட்சிகளிலும் இனி மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் ஜோதி நிர்மலா சாமி தகவல்
ADDED : ஜன 23, 2025 10:39 PM
சென்னை:''நகர்ப்புற உள்ளாட்சிகள் போன்று, ஊரக உள்ளாட்சிகளிலும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்,'' என, மாநில தேர்தல் கமிஷனர் ஜோதி நிர்மலா சாமி கூறினார்.
தமிழகத்தில் ஊரகம், நகர்ப்புறம் என இரண்டு வகையான உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன.
ஊரக உள்ளாட்சிகளில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு நேரடி தேர்தல் நடத்தப்படுகிறது.
மக்கள் ஓட்டளித்து, பதவிகளுக்கான நிர்வாகிகளை தேர்வு செய்கின்றனர். இதற்காக, நான்கு வண்ணங்களில் ஓட்டு சீட்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
அதேநேரத்தில், நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு கவுன்சிலர்களுக்கு மட்டும் நேரடி தேர்தல் நடத்துவதால், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
தற்போது, 28 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக்காலம் முடிந்துள்ளதால், தனி அலுவலர்கள் வாயிலாக உள்ளாட்சி அமைப்புகள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.
உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. உள்ளாட்சி அமைப்புகள் விரிவாக்கம் குறித்து, பொது மக்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, புதிதாக வார்டுகள் உருவாக்கப்பட உள்ளன.
இதற்கிடையே, தேர்தல் நடத்துவதற்கான பணிகளிலும் மாநில தேர்தல் கமிஷன் தயாராகி வருகிறது. வரும் தேர்தல்களில் நகர்ப்புற உள்ளாட்சிகள் போன்று, ஊரக உள்ளாட்சிகளுக்கும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது.
இதற்காக, ஊரக உள்ளாட்சிகளில் பயன்படுத்தும் வகையில், கூடுதல் வசதிகளுடன் கூடிய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அறிமுகம் செய்துள்ள 'பெல்' நிறுவன அதிகாரிகள், சென்னை கோயம்பேடில் உள்ள மாநில தேர்தல் கமிஷனில் நேற்று செயல்முறை விளக்கம் அளித்தனர்.
இது குறித்து, மாநில தேர்தல் கமிஷனர் பா.ஜோதி நிர்மலா சாமி கூறியதாவது:
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளில், 100 சதவீதம் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதேநேரம், ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் நான்கு ஓட்டுகள் போட வேண்டியிருப்பதால், ஓட்டு சீட்டுகள் பயன்படுத்தப்பட்டன.
கடந்த உள்ளாட்சி தேர்தலில், கன்னியாகுமரி மாவட்டம் மேல்புரம் ஒன்றியத்தில், சோதனை முறையில் மின்னணு இயந்திரம் வாயிலாக தேர்தல் நடத்தப்பட்டது. அதன் வெற்றியை தொடர்ந்து, வரும் உள்ளாட்சி தேர்தல்களில் படிப்படியாக மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

