ஜோதிமணிக்கு வாய்ப்பு தரக் கூடாது தி.மு..க., நிர்வாகிகள் எதிர்ப்பு
ஜோதிமணிக்கு வாய்ப்பு தரக் கூடாது தி.மு..க., நிர்வாகிகள் எதிர்ப்பு
ADDED : பிப் 06, 2024 02:13 AM

சென்னை: 'கரூர் தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கக்கூடாது; தி.மு.க., போட்டியிட வேண்டும்' என அத்தொகுதி தி.மு.க.,வினர் வலியுறுத்தி உள்ளனர்.
சென்னை அறிவாலயத்தில் நேற்று, கரூர், திண்டுக்கல் நிர்வாகிகளுடன் ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகளான அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி மற்றும் அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
அப்போது, 'கரூர் தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கக்கூடாது. தி.மு.க., போட்டியிட வேண்டும். தி.மு.க., தலைமை யாரை கை காட்டுகிறதோ, அவருக்கு பணியாற்ற தயாராக இருக்கிறோம். எக்காரணம் கொண்டும் ஜோதிமணிக்கு மட்டும் மீண்டும் வாய்ப்பு தரக் கூடாது. அவரால் தான் கரூர் மாவட்டத்தில் கோஷ்டி பூசல் முளைத்து சரி செய்ய முடியாத அளவுக்குச் சென்றுள்ளது' என நிர்வாகிகள் வலியுறுத்திக் கூறினர்.
'யார் போட்டியிடுவது யாருக்கு தொகுதி என்பதை, தலைமை முடிவு செய்யும்.
ஒற்றுமையுடன் செயல்பட்டு, கூட்டணி வெற்றிக்கு பாடுபடுங்கள்' என, அமைச்சர்கள் அறிவுரை கூறினர்.
திண்டுக்கல் தொகுதி நிர்வாகிகளிடம் பேசிய ஒருங்கிணைப்பு குழுவினர், 'கடந்த தேர்தலில் பெற்ற ஓட்டுக்களை விட இந்த தேர்தலில் அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். மாவட்டத்தில் இருக்கக்கூடிய பிரச்னைகள் அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு, தேர்தல் பணிகளில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்' என அறிவுறுத்தினர்.

