கள்ளக்குறிச்சி பெண் வி.ஏ.ஓ.,வுக்கு சிறை; ஆபீசில் வைத்துப் பூட்டிய உதவியாளர் எஸ்கேப்!
கள்ளக்குறிச்சி பெண் வி.ஏ.ஓ.,வுக்கு சிறை; ஆபீசில் வைத்துப் பூட்டிய உதவியாளர் எஸ்கேப்!
UPDATED : டிச 17, 2024 12:17 PM
ADDED : டிச 17, 2024 11:34 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி வடக்கனேந்தல் கிராமத்தில் வி.ஏ.ஓ., தமிழரசியை அலுவலகத்தில் வைத்து, நேற்று (டிச.,16) பூட்டு போட்டு பூட்டி விட்டுச்சென்றார் கிராம நிர்வாக உதவியாளர் சங்கீதா. இது குறித்து வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி பகீர் கிளப்பி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் வடக்கனேந்தல் கிராமத்தில், தமிழரசி என்பவர் வி.ஏ.ஓ.,வாக பணிபுரிந்து வருகிறார். இதே அலுவலகத்தில், கிராம நிர்வாக உதவியாளராக சங்கீதா என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று (டிச.,16) வி.ஏ.ஓ., தமிழரசியை அலுவலகத்தில் வைத்து பூட்டு போட்டு பூட்டி விட்டு கிராம நிர்வாக உதவியாளர் சங்கீதா சென்றுவிட்டார். 'கடும் நடவடிக்கை எடுக்கச் செய்வேன்' என்று தமிழரசி தெரிவித்து உள்ளார்.
அதுமட்டுமின்றி, கதவை பூட்ட வேண்டாம் என தமிழரசி சத்தம் போட்டு கூப்பிட்டும், சங்கீதா துளி அளவு கூட மதிக்காமல், பைல்களை எடுத்து கொண்டு பைக்கில் சென்று விட்டார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி பரபரப்பை கிளப்பி உள்ளது. இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தொலைபேசி வாயிலாக வி.ஏ.ஓ., தமிழரசி தெரிவித்தார்.அரை மணி நேரம் கழித்து பூட்டை சங்கீதா திறந்துவிட்டார்.
ஏற்கனவே, வி.ஏ.ஓ., தமிழரசிக்கு, சங்கீதாவுக்கு மோதல் போக்கு நிலவி வந்துள்ளது. இருவரும் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபடுவது வழக்கமாக நடந்து வந்துள்ளது. சங்கீதா மீது வி.ஏ.ஓ., தமிழரசி உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.
கிராம நிர்வாக உதவியாளர் சங்கீதா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.