அன்புமணியை விமர்சித்த எம்.எல்.ஏ.,வுக்கு அதிரடி கல்தா
அன்புமணியை விமர்சித்த எம்.எல்.ஏ.,வுக்கு அதிரடி கல்தா
ADDED : ஜூலை 03, 2025 04:18 AM

சென்னை : பா.ம.க.,விலிருந்து, சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ., அருள் நீக்கப்படுவதாக, அக்கட்சி தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார்.
பா.ம.க.,வில் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையே மோதல், அதிகரித்து வருகிறது. பா.ம.க., - -எம்.எல்.ஏ.,க்கள் ஐந்து பேரில் ஜி.கே.மணி, அருள் ஆகிய இருவர், ராமதாஸ் பக்கம் உள்ளனர். சிவகுமார், வெங்கடேஸ்வரன், சதாசிவம் ஆகிய மூவர், அன்புமணி பக்கம் உள்ளனர்.
சில நாட்களுக்கு முன், அருளுக்கு பா.ம.க., இணைப் பொதுச்செயலர் பொறுப்பை, ராமதாஸ் வழங்கினார். அப்போது, பேட்டியளித்த அருள், 'அன்புமணி தலைமையில், 15 ஆண்டுகளாக, தொடர்ந்து தோல்விகளை மட்டுமே பா.ம.க., சந்தித்து வருகிறது.
பதவிக்காக பெற்ற தந்தையை அன்புமணி எதிர்க்கிறார், அவரது ஆதரவாளர்களால், ராமதாஸ் உடன் இருப்பவர்களின், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது' என கூறினார்.
இது அன்புமணி தரப்புக்கு, அருள் மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், அருளை கட்சியிலிருந்து அன்புமணி நீக்கியுள்ளார்.
அவரது அறிக்கை:
சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ., அருள், கட்சி கட்டுப்பாட்டை மீறும் வகையிலும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும், செயல்படுகிறார்.
சமீப காலமாக, கட்சித் தலைமை குறித்து, அவதுாறான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். கட்சி கட்டுப்பாட்டை மீறியதற்காக, 12 மணி நேரத்திற்குள், மன்னிப்பு கேட்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டது; அதை அவர் மதிக்கவில்லை.
பா.ம.க., ஒழுங்கு நடவடிக்கைக்குழு அளித்த பரிந்துரை அடிப்படையில், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அருள் நீக்கப்படுகிறார். பா.ம.க.,வினர் யாரும், அவருடன் எந்த வகையிலும், தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.