ADDED : செப் 21, 2024 12:23 PM

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவராக நடிகர் கமல் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
நடிகர் கமல் ஹாசன், 2018ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை துவங்கினார். முதல் மாநாட்டை மதுரையில் நடத்தி கட்சியின் பெயரை அறிவித்தார். 2019ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிட்டு 16 லட்சத்திற்கும் அதிகமாக( 3.7%) ஓட்டுகளை பெற்றது. பிறகு நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் அக்கட்சி களமிறங்கவில்லை.
2021ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும் தனித்தே அக்கட்சி களமிறங்கியது. இருப்பினும் ஒரு தொகுதிகளில் கூட அக்கட்சியால் வெற்றிபெற முடியவில்லை. நடிகர் கமலும் கோவை தெற்கு தொகுதியில் போராடி பா.ஜ.,வின் வானதி சீனிவாசனிடம் தோல்வியடைந்தார். இதன் பிறகு அக்கட்சியில் சில முக்கிய நிர்வாகிகள் ஒருவர் பின் ஒருவராக விலகி தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளில் அடைக்கலமாகினர்.
இருப்பினும் கமல் தொடர்ந்து கட்சியை நடத்தி வருகிறார். 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அக்கட்சி போட்டியிடவில்லை. மாறாக தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு அளித்தது. அக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கமல் பிரசாரம் செய்தது. கமலின் கட்சிக்கு ஒரு ராஜ்யசபா சீட் வழங்கப்படும் என தி.மு.க., உறுதி அளித்து உள்ளது.
இந்நிலையில், லோக்சபா தேர்தலுக்கு பிறகு முதல்முறையாக மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடந்த கூட்டத்தில், கட்சியின் தலைவராக கமல் மீண்டும் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். இதற்கான தீர்மானம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது.