பிரசாரத்திற்கு வராமல் மருமகனை கழட்டி விட்ட 'தாய்மாமன்' கமல்
பிரசாரத்திற்கு வராமல் மருமகனை கழட்டி விட்ட 'தாய்மாமன்' கமல்
ADDED : மார் 25, 2024 03:51 AM

மானாமதுரை : சிவகங்கை லோக்சபா தொகுதி பிரசாரத்திற்கு வராமல் மருமகனை தாய்மாமனான மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கழட்டி விட்டதாக தி.மு.க., கூட்டணி காங்., வேட்பாளரான கார்த்தி ஆதரவாளர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
இத்தொகுதியில் தி.மு.க., கூட்டணியில் சிட்டிங் எம்.பி., கார்த்தி, அ.தி.மு.க., சார்பில் கல்லல் ஒன்றிய செயலாளர் சேவியர் தாஸ், பா.ஜ., கூட்டணி சார்பில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக்கழக தலைவர் தேவநாதன், நாம் தமிழர் கட்சி சார்பில் எழிலரசி போட்டியிடுகின்றனர்.
சில வாரங்களுக்கு முன்பு மானாமதுரையில் பேட்டியளித்த கார்த்தி,''தாய் மாமன் முறை கொண்ட கமல் தன்னை ஆதரித்து சிவகங்கை தொகுதிக்கு பிரசாரத்திற்கு கண்டிப்பாக வருவார்,'' என்றார். இந்நிலையில் நேற்று கமல் ஆதரித்து பிரசாரம் செய்யும் இடங்கள் மக்கள் நீதி மய்யம் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மார்ச் 29 முதல் ஏப்., 16 வரை ஈரோடு, சேலம், திருச்சி, சிதம்பரம், ஸ்ரீபெரும்புதுார், சென்னை, மதுரை, துாத்துக்குடி, திருப்பூர், கோயம்புத்துார், பொள்ளாச்சி ஆகிய இடங்களில் மட்டுமே பிரசாரம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் காங் போட்டியிடும் தொகுதிகள் இல்லை. குறிப்பாக சிவகங்கை விடுபட்டுள்ளதால் கார்த்தி ஆதரவாளர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

