ADDED : நவ 08, 2025 01:16 AM
சென்னை: ம.நீ.ம., கட்சி தலைவர் கமல் பிறந்த நாளை ஒட்டி, அவருக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல், நேற்று தன் 71வது பிறந்த நாளை கொண்டாடினார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில், மாநில நிர்வாகிகள், 'கேக்' வெட்டி பிறந்த நாளை கொண்டாடினர். அன்னதானம் வழங்கப்பட்டது.
நேற்று மாலை, முதல்வர் ஸ்டாலினை, கமல் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், 'பன்முகத் திறமையோடு தமிழ் திரையுலகை உலகத் தரத்துக்கு கொண்டு சென்றிடும் தீராத கலைத் தாகமும்,- பன்முகத்தன்மைமிக்க நம் நாட்டை, பாசிச சக்திகளிடமிருந்து மீட்கும் தணியாத நாட்டுப் பற்றும் கொண்டு, என் மீது அளவற்ற அன்போடு தோழமை பாராட்டும் கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.
'ஆட்சியாளர்கள் நெறி பிறழாது நடக்க, பார்லிமென்டில் முழங்கிடும் அரசியல் தொண்டும், திரையாளும் கலைத்தொண்டும் மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்' என தெரிவித்துள்ளார்.
கமலை நேற்று காலை விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
துணை முதல்வர் உதயநிதி, தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன், தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை, பா.ம.க., தலைவர் அன்புமணி, த.மா.கா., தலைவர் வாசன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் வாழ்த்து செய்தி அனுப்பினர்.

