ADDED : ஆக 08, 2025 01:42 AM

சென்னை: ராஜ்யசபாவில் எம்.பி.,யாக பதவியேற்ற பின், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல், முதன் முறையாக பிரதமர் மோடியை நேற்று மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் ம.நீ.ம., இடம் பெற்றிருந்தது. தமிழகம் முழுதும் கமல் பிரசாரம் செய்தார். அதற்கு பரிசாக, கமலுக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்கப்பட்டது. கடந்த மாதம், 25ம் தேதி, தி.மு.க., ஆதரவுடன், ராஜ்யசபா எம்.பி.,யாக கமல் பதவி ஏற்றார்.
மரியாதை நிமித்தமாக, நேற்று பிரதமரை சந்தித்த கமல், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். கீழடி நினைவு பட்டயம் ஒன்றை, பிரதமர் மோடிக்கு கமல் பரிசளித்தார். பின், இருவரும் தனியாக பேசினர்.
பிரதமருடனான சந்திப்பு குறித்து கமல் வெளியிட்ட அறிக்கை:
பிரதமர் மோடியை, மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். தமிழகத்தின் பிரதிநிதியாக, அவரிடம் சில கோரிக்கைகளை வைத்தேன். அவற்றுள் முக்கியமானது கீழடி. தமிழனின் தொன்மையை, தமிழ் நாகரிகத்தின் பெருமையை, உலகிற்கு உரக்கச் சொல்லும் தமிழர்களின் முன்னெடுப்புகளுக்கு, பிரதமர் உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ராஜ்யசபா எம்.பி.,யாக பதவியேற்றுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல், நேற்று பிரதமர் மோடியை சந்தித்தார். இடம்: புதுடில்லி.