காமராஜர் பல்கலை துணைவேந்தர் தேடுதல் குழு;தமிழக அரசுக்கு கவர்னர் அறிவுறுத்தல்
காமராஜர் பல்கலை துணைவேந்தர் தேடுதல் குழு;தமிழக அரசுக்கு கவர்னர் அறிவுறுத்தல்
ADDED : ஜன 30, 2025 09:23 PM

சென்னை:மதுரை காமராஜர் பல்கலை துணைவேந்தர் தேடுதல் குழுவில், யு.ஜி.சி., தலைவரின் பிரதிநிதியையும் சேர்த்து புதிய அறிவிப்பு வெளியிடும்படி தமிழக அரசுக்கு கவர்னர் அறிவுறுத்தியுள்ளார்.
இது குறித்து தமிழக கவர்னர் மாளிகை ராஜ்பவன் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:
மதுரை காமராஜ் பல்கலை சட்ட விதிமுறைகளின்படி புதிய துணைவேந்தர் தேடுதல் கமிட்டி அமைத்து உத்தரவிட்டார். அதில், வேந்தர், சிண்டிகேட் பிரதிநிதி, செனட் பிரதிநிதி, யு.ஜி.சி., தலைவரின் பிரதிநிதி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். சுப்ரீம் கோர்ட் உத்தரவுகளின்படி இந்த கமிட்டி அமைக்கப்பட்டிருந்தது.
டிச.,16ம் தேதியிட்ட கடிதத்தில் இதற்கான உத்தரவை தமிழக அரசுக்கு கவர்னர் வழங்கியிருந்தார். கவர்னரின் பிரதிநிதியை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கவும் கூறியிருந்தார்.
ஆனால், ஜன.,9ல் உயர்கல்வித்துறை வெளியிட்ட அரசாணையில், யு.ஜி.சி., தலைவரின் பிரதிநிதி இடம் பெறவில்லை. இது, சுப்ரீம் கோர்ட் உத்தரவுகளை மீறிய செயல். யு.ஜி.சி., ஒழுங்குமுறைகளுக்கு மாறாக அமைக்கப்படும் தேடுதல் குழு பரிந்துரை அடிப்படையில் செய்யப்படும் துணைவேந்தர் நியமனம் செல்லாது என்று ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் ஒரு வழக்கில் தீர்ப்பளித்துள்ளது.
எனவே, தமிழக அரசு, அந்த அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும். வேந்தர் நியமித்தபடி யு.ஜி.சி., தலைவரின் பிரதிநிதியை கொண்ட தேடுதல் குழு நியமித்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.

