சென்னை, கோவையை தொடர்ந்து காஞ்சிபுரத்தில் அதிக மின் இணைப்பு
சென்னை, கோவையை தொடர்ந்து காஞ்சிபுரத்தில் அதிக மின் இணைப்பு
ADDED : பிப் 12, 2025 12:25 AM
சென்னை:காஞ்சிபுரம் மாவட்டத்தில், அதிக தொழிற்சாலைகள் துவக்கப்படுவதால், சென்னை, கோவையை அடுத்து, அம்மாவட்டத்தில் உயரழுத்த மின் இணைப்புகளின் எண்ணிக்கை, 1,000த்தை தாண்டி, 1,085 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகம் முழுதும் அனைத்து பிரிவுகளுக்கும், மின் வினியோகம் செய்யும் பணியை, அரசு நிறுவனமான மின் வாரியம் மட்டுமே மேற்கொள்கிறது.
சென்னையை அடுத்து கோவையில், அதிக தொழிற்சாலைகள் உள்ளன. கடந்த, 2023 மார்ச் நிலவரப்படி, தமிழகத்தில் இருந்த உயரழுத்த மின் இணைப்புகளில், அதிக அளவாக சென்னையில், 1,409; கோவையில், 1,381 மின் இணைப்புகள் இருந்தன.
சமீப காலமாக, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பல நிறுவனங்கள் தொழிற்சாலைகளை துவக்கி வருகின்றன.
இதையடுத்து, 2024 மார்ச் நிலவரப்படி, சென்னை, கோவையை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உயரழுத்த மின் இணைப்புகளின் எண்ணிக்கை, 1,085 ஆக அதிகரித்துள்ளது.
இதுவே முந்தைய ஆண்டில், 860ஆக இருந்தது. கடந்த மார்ச் நிலவரப்படி, சென்னையில், 1,425; கோவையில், 1,405 உயரழுத்த மின் இணைப்புகள் உள்ளன.
கடந்த ஓராண்டில் மட்டும், சென்னையில், 16, கோவையில், 44 உயரழுத்த இணைப்புகள் வழங்கப்பட்ட நிலையில், காஞ்சிபுரத்தில் அதிக அளவாக, 225 இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
அதற்கு அடுத்து, ஓராண்டில் அதிக அளவாக திருவள்ளூரில், 94 மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அம்மாவட்டத்தில், 2023ல் 708 ஆக இருந்த உயரழுந்த மின் இணைப்புகள், 2024ல், 802 ஆக உயர்ந்துள்ளன.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகம் முழுதும், 11,435 உயரழுத்த மின் இணைப்புகள் உள்ளன. மாநிலம் முழுதும் தினமும் சராசரியாக, 30 கோடி யூனிட்களாக உள்ள மின் நுகர்வில், உயரழுத்த இணைப்புகளின் பங்கு, 37 சதவீதம். அதற்கு ஏற்ப, அந்த பிரிவில் இருந்து, யூனிட்டிற்கு 11.29 ரூபாய் வருவாய் கிடைக்கிறது.
இது, மற்ற பிரிவுகளில் இருந்து கிடைப்பதை விட அதிகம். சென்னையில் இடம் இல்லாததால், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் தொழில் துவங்க நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.