துாத்துக்குடியில் கனிமொழி எம்.பி., தனி ரூட் புத்தொழில் களம் புதிய முயற்சி துவக்கம்
துாத்துக்குடியில் கனிமொழி எம்.பி., தனி ரூட் புத்தொழில் களம் புதிய முயற்சி துவக்கம்
ADDED : ஜன 30, 2025 02:19 AM
துாத்துக்குடி:துாத்துக்குடி லோக்சபா தொகுதி எம்.பி., கனிமொழி சமூக வலைதளங்களில் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது:
துாத்துக்குடி இளைஞர்களுக்காக, 'புத்தொழில் களம்' என்ற புதிய முன்னெடுப்பை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இத்திட்டத்தின் மூலம் துாத்துக்குடியில் உள்ள இளம் தொழில் முனைவோருக்கு வாய்ப்பை உருவாக்கி தர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இளைஞர்கள்தான் சமூக மாற்றத்திற்கான உந்து சக்தி. சமூகத்தில் இருக்கக் கூடிய ஏற்றத்தாழ்வுகளையும், பல்வேறு பிரச்னைகளையும் தொழில் முயற்சி காரணமாக சோஷியல் ஸ்டாட் அப் வழியாக இடைவெளிகளை குறைக்க இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். 18 முதல் 35 வயதிற்குட்பட்ட துாத்துக்குடியை சேர்ந்த இளம் தொழில் முனைவோர் இந்த திட்டத்தில் பங்கேற்கலாம்.
இது போட்டி அல்ல, ஒரு வாய்ப்பு. சமூகத்தில் இருக்கக் கூடிய பல்வேறு விஷயங்களை எப்படி மாற்ற நினைக்கிறீர்கள் என்பதற்கு ஒரு வாய்ப்பாக இதை பயன்படுத்திக் கொள்ள முடியும். தேர்வாகும் 3 திட்டங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும். துறைசார்ந்த நிபுணர்களின் வழிகாட்டுதல்களும் வழங்கப்படும்.
துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் ஒரு புதிய வாய்ப்பை உருவாக்கக் கூடிய இந்த முயற்சியில் பங்கேற்று சமூகத்தை மாற்றுங்கள்.
இவ்வாறு வீடியோவில் அவர் கூறியுள்ளார்.

