ADDED : டிச 23, 2024 06:45 AM

சென்னை : 'பொங்கல் திருநாளின் போது நடக்கவுள்ள, யு.ஜி.சி., நெட் தேர்வை வேறு நாளுக்கு மாற்றம் செய்ய வேண்டும்' என, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு, தி.மு.க., பார்லிமென்ட் குழு தலைவர் கனிமொழி கடிதம் எழுதி உள்ளார்.
கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
சமீபத்தில் தேசிய தேர்வு முகமை வெளியிட்ட யு.ஜி.சி., 'நெட்' தேர்வு அட்டவணையின்படி, நெட் தேர்வு ஜனவரி 3ல் துவங்கி, 16ம் தேதி வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் அன்றும் தேர்வு நடக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, தமிழ் மக்களின் அடையாள திருநாளை கொண்டாட இடையூறாக அமைந்துள்ளது.
குறிப்பாக, மக்களின் பண்பாட்டு உரிமையை சிதைக்கும் விதமாக இந்த அறிவிப்பு அமைந்துள்ளது. எனவே, ஜனவரி 15, 16ம் தேதிகளில் நடக்க இருப்பதாக அறிவித்த தேர்வுகளை, வேறு தேதிக்கு மாற்றம் செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.