காரைமேடு - நாகப்பட்டினம் 4 வழி சாலை திட்டம்; விரைந்து பணிகளை முடிக்க ஒப்பந்ததாரருக்கு 'நகாய்' கெடு
காரைமேடு - நாகப்பட்டினம் 4 வழி சாலை திட்டம்; விரைந்து பணிகளை முடிக்க ஒப்பந்ததாரருக்கு 'நகாய்' கெடு
ADDED : மார் 10, 2024 11:43 PM

விக்கிரவாண்டி : விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலை பணியில், காரைமேடு - நாகப்பட்டினம் வரையிலான பணிகள் மந்தமாக நடப்பதால், சாலை பயன்பாட்டிற்கு வருவது காலதாமதமாகி வருகிறது.
பணிகளை விரைந்து முடிக்க, ஒப்பந்ததாரருக்கு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கெடு விதித்துள்ளது.
விழுப்புரம் - நாகப்பட்டினம் என்.எச்.332 - ஏவில், 194 கி.மீ., துாரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்க மத்திய அரசு, 6,431 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. இப்பணியை, குஜராத்தை சேர்ந்த, 'வெல்ஸ்பன் என்டர்பிரைசஸ்' நிறுவனத்திடம், மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒப்பந்தம் செய்தது.
35 சதவீதம்
இச்சாலை பணி, 2021ல் துவங்கியது. தற்போது, விழுப்புரம் - புதுச்சேரி அரியூர் வழியாக கடலுார், பி.முட்லுார், சிதம்பரம், காரைமேடு வரை, 138 கி.மீ., துாரத்தில் மேம்பாலம், சிறுபாலம், குறும்பாலங்கள் அமைத்து, 85 சதவீத பணி முடிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில், காரைமேடு துவங்கி நாகப்பட்டினம் புத்துார் ரவுண்டானா வரை, 56 கி.மீ.,க்கு, 1,906 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் பணிகளை, வெல்ஸ்பன் எண்டர்பிரைசஸ் மற்றும் அதன் துணை ஒப்பந்த நிறுவனம் பணிகளை செய்து வருகிறது. இப்பகுதிகளில், 35 சதவீத பணிகள் மட்டுமே முடிந்துள்ளன.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகாவிற்குட்பட்ட, 8 கிராமங்களில், 6 கி.மீ., துாரத்திற்கு நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட சட்ட சிக்கல்கள், சாலை பணிக்கு தேவையான மண் கிடைக்காதது போன்ற காரணங்களால், பணி தாமதமாக துவங்கியது.
இப்பகுதியில், திருக்கடையூர், காளியப்பநல்லுாரில் தலா ஒன்று, காரைக்காலில் இரண்டு, நாகப்பட்டினத்தில் இரண்டு என, ஆறு மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு, இணைப்பு சாலை பணி நடைபெற்று வருகிறது.
மேலும், பொறையார் அருகே எருக்காட்டாஞ்சேரி, காரைக்காலில் திருநள்ளாறு சாலையில் தலா ஒரு ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
உப்பனாறு, நந்தலாறு, வெட்டாறு உள்ளிட்ட ஏழு இடங்களில் ஆற்றை கடக்கும் வகையில் பெரிய பாலம் பணிகளும், சிறிய வாய்க்காலை கடக்கும் வகையில், 29 இடங்களில் சிறு பாலங்களும், மழைநீர் வடிகால் செல்லும் 221 இடங்களில் சிறுபாலம் அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதில், ஒழுகைமங்கலம் கிராமத்தில் உப்பனாறு பகுதியில், தரங்கம்பாடிக்கு ரயில்வே பாதை அமைக்கும் திட்டம் துவங்க உள்ளது. அதையொட்டி, ஆற்றுப்பாலத்துடன், ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
ஆலோசனை
சீர்காழி தாலுகாவில் செம்பதனிருப்பு, மயிலாடுதுறை தாலுகாவில் எருக்காட்டாஞ்சேரி, காரைக்கால் மற்றும் நாகப்பட்டினத்தில் அரசு கலைக்கல்லுாரி, பனங்குடி, பைபாஸ் பகுதி என ஆறு இடங்களில், கனரக வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் கடக்க சுரங்கப்பாதை அமைக்க வேண்டியுள்ளது.
கடலுாரிலிருந்து நாகப்பட்டினம் வரை கிழக்கு கடற்கரை சாலையில் சில இடங்களில் இ.சி.ஆரை இணைத்தே நான்கு வழிச்சாலை பணி நடந்து வருகிறது.
பணிகளை விரைந்து முடிக்க, புதுச்சேரி, 'நகாய்' திட்ட அமலாக்க பிரிவு இயக்குனர் சக்திவேல், நகாய் மேலாளர் கோபி ஆகியோர் பணிகள் நடபெறும் இடங்களில் நேரில் ஆய்வு செய்து, ஆலோசனை வழங்கி வருகின்றனர்.
தற்போது, சாலைகள் அமைக்க தேவையான மண் எடுக்க அரசு சார்பில் அனுமதி கிடைத்துள்ளது. வரும் 2025 ஜனவரி இறுதிக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க ஒப்பந்ததாரருக்கு, நகாய் கெடு விதித்துள்ளது.

