ADDED : செப் 08, 2025 05:42 AM

பெங்களூரு : கர்நாடக முதல்வர் சித்தராமையா, அரசு சார்பில் வழங்கப்பட்ட இனோவா காரை பயன்படுத்தி வருகிறார். அவரது கார் 7 முறை போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
அதாவது 2024 மார்ச் 14ல் சந்திரிகா ஹோட்டல் பகுதியில் சென்றபோதும், அதே ஆண்டு ஆக., 8ல் பழைய விமான நிலைய சாலையில் லீலா பேலஸ் சந்திப்பு அருகிலும், ஆக., 20ல் சிவானந்த சர்க்கிள் பகுதியிலும் காரில் சென்றபோதும் முன் இருக்கையில் அமர்ந்திருந்த சித்தராமையா சீட் பெல்ட் அணியாமல் சென்றுள்ளார். மொத்தம் 6 முறை சித்தராமையா சீட் பெல்ட் அணியாமல் போக்குவரத்து விதிகளை மீறியுள்ளார். இது அந்தந்த பகுதிகளில் உள்ள நுண்ணறிவு போக்குவரத்து மேலாண்மை கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
மேலும், 2025 ஜூலை 9ல் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலைய எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் சித்தராமையாவின் காரை டிரைவர் வேகமாக ஓட்டி போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டுள்ளார். இந்த 7 போக்குவரத்து விதிமீறல்களுக்கும் போக்குவரத்து போலீசார் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்திருந்தனர். தற்போது பெங்களூருவில் போக்குவரத்து விதிமீறல் வழக்குகளுக்கு 50 சதவீத தள்ளுபடியில் அபராதம் செலுத்த போக்குவரத்து போலீசார் கால அவகாசம் வழங்கியுள்ளனர். இத்திட்டத்தின் கீழ் சித்தராமையா பயன்படுத்தும் காருக்கு விதிக்கப்பட்ட 7 விதிமீறல்களுக்கும் மொத்தம் ரூ. 2500 அபராதம் செலுத்தப்பட்டதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.