பிரத்யங்கிரா தேவி கோவிலில் கர்நாடக துணை முதல்வர் வழிபாடு
பிரத்யங்கிரா தேவி கோவிலில் கர்நாடக துணை முதல்வர் வழிபாடு
ADDED : ஜன 09, 2025 07:24 PM

தஞ்சாவூர்:கர்நாடக மாநில காங்., தலைவரும், அம்மாநில துணை முதல்வருமான சிவகுமார், தன் மனைவி உஷாவுடன் நேற்று பெங்களூருவில் இருந்து, தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்துக்கு தனி ஹெலிகாப்டரில் வந்தார். அவரை, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கும்பகோணம் மேயர் சரவணன், தஞ்சாவூர் வடக்கு மாவட்ட தலைவர் லோகநாதன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பின், கும்பகோணம் அருகே அய்யாவாடியில் உள்ள சர்வசத்ரு சம்ஹாரிணி என அழைக்கப்படும் பிரத்யங்கிரா தேவி கோவிலுக்கு சென்ற சிவகுமார் தம்பதி, சுவாமி தரிசனம் செய்து, சிதறு தேங்காய் உடைத்து வழிபட்டனர். சிறப்பு பூஜை செய்து வழங்கப்பட்ட பிரசாதத்தை பெற்றுக் கொண்டு, மீண்டும் கும்பகோணம் வந்து ஹெலிகாப்டரில் காஞ்சிபுரம் புறப்பட்டு சென்றனர்.
காஞ்சிபுரத்துக்கு புறப்படுவதற்கு முன், சிவகுமார் அளித்த பேட்டி:
பா.ஜ., ஆளாத மாநிலங்களில், ஆளும்கட்சிக்கு எதிராக பிரச்னைகளை உருவாக்குகின்றனர். மாநிலங்களின் அதிகாரத்தை பறிக்க நினைக்கும் மத்திய அரசு, மாநிலங்களுக்கு முறையாக நிதி வழங்காமல் அநீதி இழைத்து வருகிறது. மாநிலங்கள் வழங்கும் வரியில் இருந்து, உரிய பங்கை மத்திய அரசு திரும்ப வழங்குவதில்லை. இதனால், மாநிலங்களில் செய்ய வேண்டிய மக்கள் நலப் பணிகள் பாதிக்கின்றன. இதனால், எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இருக்கும் ஆளும்கட்சியினரோடு சேர்ந்து போராடுகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
துணை முதல்வரான சிவகுமார், கர்நாடக முதல்வராகும் கனவில் உள்ளார். ஆனால், இதற்கு தற்போதைய முதல்வர் சித்தராமையா தரப்பு முட்டுக்கட்டை போட்டு வருகிறது. அந்த முட்டுக்கட்டையை தகர்த்து, தான் எப்படியும் முதல்வராக வேண்டும் என்பதற்கான வேண்டுதலுக்காகவே சிவகுமார், தனி ஹெலிகாப்டர் வாயிலாக, கும்பகோணம் வந்து அய்யாவாடிக்குச் சென்று, பிரத்யங்கிரா தேவி கோவிலுக்குச் சென்று வழிபட்டதாக காங்., வட்டாரங்களில் கூறுகின்றனர்.
பிரத்யங்கிரா தேவி, எதிரிகளையும் அழிப்பவள் என்ற நம்பிக்கை உண்டு. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலிலதா, அவரது தோழி சசிகலா, முன்னாள் முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட பலரும் அய்யாவாடி வந்து வழிபாடு நடத்தியுள்ளனர். அந்த வரிசையில், சிவகுமாரும் இங்கு வந்து வழிபட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

