2.50 டி.எம்.சி.,க்கு பதிலாக 0.66 பிப்ரவரியில் தந்தது கர்நாடகா
2.50 டி.எம்.சி.,க்கு பதிலாக 0.66 பிப்ரவரியில் தந்தது கர்நாடகா
ADDED : மார் 06, 2024 01:39 AM
சென்னை:தமிழகத்திற்கு பிப்ரவரி மாதம் வழங்க வேண்டிய, 2.50 டி.எம்.சி., காவிரி நீரில், 0.66 டி.எம்.சி., மட்டுமே, கர்நாடகா அரசு வழங்கியுள்ளது.
தமிழகத்திற்கு ஆண்டுதோறும், 177.25 டி.எம்.சி., காவிரி நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய நீரின் அளவை, காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது.
ஆண்டுதோறும் ஜூன் மாதம் நீர் வழங்கும் தவணைக்காலம் துவங்கி, அடுத்தாண்டு மே மாதம் முடியும். நடப்பு நீர் வழங்கும் காலத்தில், 2023 ஜூன் முதல் கடந்த 3ம் தேதி வரை, 170 டி.எம்.சி., நீரை வழங்கி இருக்க வேண்டும். ஆனால், 77.4 டி.எம்.சி., மட்டுமே கிடைத்துள்ளது.
நடப்பு நீர் வழங்கும் காலத்தில், 92.5 டி.எம்.சி., நீரை கர்நாடகா நிலுவை வைத்துள்ளது. பிப்ரவரி மாதம் 2.50 டி.எம்.சி., வழங்க வேண்டும்.
ஆனால், 0.66 டி.எம்.சி., நீர் மட்டுமே திறக்கப்பட்டு உள்ளது. கர்நாடகா அரசு குறைந்தபட்ச அளவு நீரை கூட வழங்காததால், காவிரியில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

