தமிழக கவர்னரை நீக்க வேண்டும் கார்த்தி எம்.பி., வலியுறுத்தல்
தமிழக கவர்னரை நீக்க வேண்டும் கார்த்தி எம்.பி., வலியுறுத்தல்
ADDED : பிப் 14, 2024 02:03 AM
சிவகங்கை:அரசியல் சாசனத்தை மீறி நடக்கும் தமிழக கவர்னர் ரவியை உடனடியாக ஜனாதிபதி பதவி நீக்கம் செய்ய வேண்டும்'' என சிவகங்கையில் கார்த்தி எம்.பி., தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: எலக்ட்ரானிக் ஓட்டு மிஷின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. ஓட்டுப்பதிவு உறுதி (வி.வி., பேட்) தாளையும் எண்ணினால், பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். அமைச்சர் ஒருவரை பதவியில் வைத்திருப்பது, நீக்குவது முதல்வரின் அதிகாரத்திற்கு உட்பட்டது. செந்தில் பாலாஜி கைது பா.ஜ.,விற்கு கிடைத்த வெற்றி என அண்ணாமலை கூறினாலும், ஆவணங்களை வைத்து விசாரித்து கைது நடவடிக்கை எடுக்கலாமே. பா.ஜ., அரசுக்கு எதிராக யார் குரல் கொடுத்தாலும், அவர்களை நசுக்க வேண்டும் என நினைக்கிறது. டில்லியில் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியது தேவையற்றது.
கவர்னரை நீக்க வேண்டும்
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, முதல்வர் தயாரித்த உரையை தான் கவர்னர் படிக்க வேண்டும். அரசியல் சாசனத்தை மீறி நடக்கும் தமிழக கவர்னர் ரவியை உடனே ஜனாதிபதி பதவி நீக்க வேண்டும். மத்திய அரசு தங்களுக்கு சாதகமாக இல்லாத மாநிலங்களை புறக்கணிப்பதை தவிர்த்து, உரிய நிதியை ஒதுக்கவேண்டும். கருத்து கணிப்பை வைத்து தேர்தல் நடத்த முடியாது.‛இண்டியா' கூட்டணி தமிழகத்தில் 39 தொகுதியிலும் வெற்றி பெறும். பெரும்பான்மை மக்கள் ராகுல் தான் பிரதமராக வேண்டும் என ஆசைப்படுகின்றனர். எம்.பி., தேர்தலில் யாருக்கு சீட் ஒதுக்க வேண்டும் என்பதை கட்சி தலைமை தான் முடிவு செய்யும். எம்.பி., நிதி ஆண்டுக்கு ரூ.5 கோடி தான். அதிலும் கொரோனா காலத்தில் 2 ஆண்டு நிதியை நிறுத்தி விட்டனர். வெளிப்படையாக 6 சட்டசபை தொகுதிக்கும் நிதியை பிரித்து தந்துள்ளேன்.அரசு ஊழியர்கள் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்றார்.

