sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பேட்டி கொடுத்த கருணாநிதி; மாட்டிவிட்டார் உதவியாளர்!

/

பேட்டி கொடுத்த கருணாநிதி; மாட்டிவிட்டார் உதவியாளர்!

பேட்டி கொடுத்த கருணாநிதி; மாட்டிவிட்டார் உதவியாளர்!

பேட்டி கொடுத்த கருணாநிதி; மாட்டிவிட்டார் உதவியாளர்!

5


UPDATED : மார் 16, 2026 08:47 AM

ADDED : மார் 12, 2026 06:57 AM

Google News

5

UPDATED : மார் 16, 2026 08:47 AM ADDED : மார் 12, 2026 06:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரசியல்வாதிகளுக்கு மீடியா மிகவும் அவசியம். அதே போல மீடியாக்களுக்கும் அரசியல்வாதிகளின் தயவு தேவை. அதிலும் 24 மணி நேர செய்தி சேனல்கள் நாள் முழுக்க பார்வையாளர்களுக்கு தீனி போட வேண்டும். வட இந்திய அரசியல்வாதிகள் எப்போதும் பத்திரிகையாளர்களுடன் நட்பில் இருப்பார்கள்.

சகஜமாக பழகுவார்கள். எளிதில் இவர்களை அணுகலாம். மத்தியப் பிரதேசத்தின் முதல்வராக இருந்தவர் காலம் சென்ற அர்ஜுன் சிங். சீனியர் காங்கிரஸ் தலைவர். காங். அரசில் மத்திய அமைச்சராகவும் பின் கவர்னராகவும் பணியாற்றியவர். பத்திரிகையாளர்களிடம் நன்றாக பழகுவார். பேட்டி கொடுக்க தயங்க மாட்டார்.

இவரிடம் ஆப் தி ரெக்கார்டு என்கிற பேச்சுக்கே இடமில்லை. செய்தியாளர்களை சந்திக்கும் முன் தன் டேப் ரெக்கார்டரை ஆன் செய்துவிடுவார். இவர் என்ன பேசுகிறார் என்பது கேசட்டில் பதிவாகும். இப்படி பேட்டி கொடுத்தவற்றையெல்லாம் கேஸட்டில் பதிவு செய்து இவரது வீட்டின் ஒரு அறையில் அலமாரி முழுக்க தேதி வாரியாக வைத்திருந்தார். இவர் சொல்லாதை பிரசுரித்தால் மாட்டிக் கொள்ள வேண்டியிருக்கும்.

நம்ம ஊர் அரசியல்வாதிகளை போனில் அழைத்தால், சார் பிஸி, குளித்துக்கொண்டிருக்கிறார் என்கிற பதில் வரும். இதை வட இந்திய அரசியல்வாதிகளிடம் எதிர்பார்க்க முடியாது. அதிலும் சில தமிழக அரசியல்வாதிகள் பத்திரிகையாளர்கள் என்றாலே பயப்படுகின்றனர். டில்லியில் நான் சந்தித்த இரண்டு மிகப் பெரிய தலைவர்களைப் பற்றி இங்கே எழுதுகிறேன்.

ஜெயலலிதா

இவர் டில்லி வருகிறார் என்றாலே தலைநகர் அரசியல் களைகட்டிவிடும். தமிழ்நாடு இல்லத்தில் ஏகப்பட்ட செக்யூரிட்டி என அமர்க்களப்படும். முதல்வர் பதவியில் இல்லாத போது டில்லியின் பிரபல நட்சத்திர ஹோட்டலில் தங்குவார். அங்கும் செக்யூரிட்டி அதிக அளவில் இருக்கும். வாஜ்பாய் அரசுக்கு அதிமுக ஆதரவு அளித்த போது இவர் டில்லி வந்தால் இவரை வரவேற்க சுஷ்மா ஸ்வராஜ் வந்துவிடுவார். அத்துடன் வாஜ்பாயின் வளர்ப்பு மகள், மருமகன் என ஒரு பெரிய பட்டாளமே ஜெயலலிதாவை வரவேற்கும்.

Image 1547936

அதிமுக எம்பிக்கள் அனைவரும் வரிசையாக நின்று வரவேற்பார்கள். யாரும் காலில் விழுந்து நான் பார்த்ததில்லை. பத்திரிகையாளர்கள் இவரை அணுகவே முடியாது. தமிழ்நாடு இல்லத்தில் இவர் வரும் போதும் வெளியேறும் போதும் வாசலில் நின்று பார்க்க மட்டுமே முடியும். கேமராவுடன் நிருபர்கள் தமிழ்நாடு இல்லத்தின் பின் வாசலில் (இந்த வழியாகத்தான் இவர் கார் செல்லும்) இவர் சென்னை திரும்பும் வரை தவமிருப்பார்கள்.

சில சமயம் சென்னைக்கு திரும்பும் முன்னர் அவராக மனது வைத்து காரில் ஏறும் முன் ஓரிரண்டு வார்த்தை பேசினால் உண்டு. அதிமுக எம்பிக்களைத் தொடர்பு கொண்டு என்ன நடந்தது என செய்தி சேகரிக்க வேண்டும். அவர்களுக்கும் என்ன நடந்தது என்பது முழுவதுமாக தெரியாது. இல்லையென்றால் தமிழக அரசின் செய்தி குறிப்பிற்காக காத்திருக்க வேண்டும்.

சென்னைக்கு வாங்க

என்.டி.டி.வி தமிழில் செய்தி தயாரித்து விஜய் டிவிக்கு வழங்கிக்கொண்டிருந்தது. நான் தமிழ் செய்தி சேகரிப்பில் இருந்தேன். தமிழ் சேனலாக இருப்பதால் அரசியல் தலைவர்கள் தமிழில் கேமராவில் பேசினால் நன்றாக இருக்கும் என பல முறை முயன்றதுண்டு. காங்கிரசின் சீனியர் தலைவர்களில் ஒருவர் கர்நாடகவைச் சேர்ந்த மார்க்ரெட் ஆல்வா. தமிழ் தெரிந்தாலும் பேசும் போது தடுமாறுவார். இவரிடம் பேட்டி எடுக்கும்போது தமிழிலே பேசுங்கள் என சொன்னேன்.

என் தமிழ் சரியில்லை…கொச்சையாக இருக்கும் என்றார்… எப்படியிருந்தாலும் பரவாயில்லை தமிழில் பேசினால் போதும் என்றதும் ஓகே என்று சொல்லி தமிழில் பேசினார். தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா திட்டக் குழு கூட்டத்திற்கு டில்லி வந்திருந்தார். கூட்டம் முடிந்த உடன் அங்கேயே நிருபர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திட்டக்குழுவின் தலைவராக இருந்தவர் மோண்டெக் சிங் அலுவாலியா. இவரும் மாநில முதல்வரும் இணைந்து பேட்டி அளிப்பது வழக்கம்.

இருவரும் ஒன்றாக பேட்டி அளித்தனர். ஆங்கிலத்திலேயே பதில் சொன்னார் ஜெ. இந்தியில் கேட்டதற்கும் ஆங்கிலத்தில் பதில். தமிழில் கேள்வி கேட்டோம்…பதில் ஆங்கிலத்தில்தான் வந்தது. பேட்டி முடிந்து ஜெயலலிதா கிளம்பினார். நான் அவர் அருகில் சென்று மேடம், 'தமிழக மக்களுக்காக நீங்கள் தமிழில் பதில் சொல்லலாமே' என்றேன். பதில் சொல்லாமல் சென்றவர் திடீரென நின்றார். என்னைத் திரும்பி பார்த்தார். தமிழில் பதில் சொல்ல தயாராகிவிட்டார் போலிருக்கிறது…என நினைத்து அவர் அருகில் சென்றேன்.

“தமிழில் பேட்டி எடுக்க வேண்டுமென்றால் நீங்கள் டிரான்ஸ்பர் வாங்கிக் கொண்டு சென்னக்கு வாங்க” என சிரித்தவாறே பதில் சொல்லிவிட்டு சென்றுவிட்டார். இரண்டு முறை இவரை பேட்டி எடுத்துள்ளேன். விக்யான் பவனில் நடைபெற்ற மாநில முதல்வர்கள் கூட்டத்தில் சந்தித்து பேசியுள்ளேன். சகஜமாக உரையாடுவார். நலன் விசாரிப்பார். சென்னையில் இவரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

கருணாநிதி

கருணாநிதி டில்லி வந்தால் ஜெயலலிதா அளவிற்கு செக்யூரிட்டி இருக்காது. திமுகவினரைத் தவிர மற்றவர்கள் யாரும் வர மாட்டார்கள். முதல்வராக இருந்த போது சில சமயம் டில்லி காங் தலைவர்கள், கம்யூனிஸ்ட் தலைவர் டி.ராஜா ஆகியோர் கருணாநிதியை சந்திப்பது உண்டு.

Image 1547935

இவரை சுலபமாக அணுகலாம். திமுக சீனியர் தலைவர் யாராவது ஒருவரிடம், 'முதல்வரை சந்திக்க வேண்டும்' என்று சொன்னால் போதும். அவர் உள்ளே முதல்வர் அறைக்கு சென்று கேட்டுவிட்டு வருவார். நேரம் இருப்பின் கருணாநிதி நிச்சயம் சந்திப்பார்.

ஆனால் ஒரு பிரச்னை…இவருடன் கூடவே நிழல் போல ஒருவர் நின்று கொண்டேயிருப்பார். அவர் கருணாநிதியின் செயலர் சண்முகநாதன். நம்மிடம் என்ன பேசினாலும்…அதை உடனே நோட்ஸ் எடுத்துக்கொண்டு செய்தி குறிப்பாக கொடுத்துவிடுவார். அதுவும் நாம் அறையைவிட்டு வெளியே வந்த 10வது நிமிடத்தில் செய்தி குறிப்பு வந்துவிடும். அவ்வளவு வேகம்.

இரண்டு பேர்

டிவி சேனல்கள் அதிகம் இல்லாத சமயம் அது. எப்போது டில்லி வந்தாலும் கருணாநிதி இரண்டு பத்திரிகையாளர்களை அவசியம் சந்திப்பார். அந்த இரண்டு பேரும் செய்தி நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். இருவருக்கும் ஒரே பெயர். டில்லி வந்த உடன் இந்த இரண்டு பேரையும் சந்திப்பார் கருணாநிதி. டில்லி அரசியல் குறித்து அவர்களிடம் கேட்பார். அவர்களும் இவரிடம் ஏதாவது கேள்வி கேட்பார்கள். அந்த பதில் உடனடியாக பிடிஐ மற்றும் யு.என்.ஐ ஏஜென்சிகளில் வந்து விடும்.

அரசு தரப்பில் மத்திய அரசுக்கு ஏதாவது சொல்ல வேண்டுமென்றாலும் இந்த இரண்டு பேரை அழைத்து செய்தி சொல்லிவிடுவார் கருணாநிதி. நிருபர்கள் கேள்விகளுக்கு இவரின் பதில்கள் நேரடியாக இருக்காது. சுற்றி வளைத்து பதில் சொல்வார். சில சமயம் என்ன சொல்ல வருகிறார் என்பது புரியாத புதிராக இருக்கும். இதை வைத்து நிருபர்கள் மத்தியில் ஒரு விவாதமே நடைபெறும். ஆனால் செய்தி நிறுவனங்களில் பணியாற்றும் அந்த இரண்டு பேர் கருணாநிதி சொல்வதை சரியாக புரிந்து கொண்டு செய்தி வெளியிடுவார்கள்.

எக்ஸ்குளூசிவ்

இது நான் தமிழ் பத்திரிகையில் பணியாற்றியபோது நடந்தது. முதல்வர் கருணாநிதி டில்லி வந்து தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்தார். அப்போது இவரைப் பேட்டி காண என் செய்தி ஆசிரியர் சென்னையிலிருந்து டில்லி வந்தார். பேட்டிக்கு நேரம் ஒதுக்கப்பட்டது. இது ஒரு எக்ஸ்குளூசிவ் பேட்டி என்றார் செய்தி ஆசிரியர். அவர் கருணாநிதியை சந்தித்து விட்டு உற்சாகத்துடன் வெளியே வந்தார்.

நிறைய நியூஸ் உள்ளது. அனைத்தும் எக்ஸ்குளூசிவ் என்னிடம் சொல்லிக் கொண்டே வந்தார். பேட்டியின் குறிப்புகளை உடனே போனில் சென்னை அலுவலகத்திற்கு டிக்டேட் செய்ய ஆரம்பித்தார். அடுத்த ஒரு மணி நேரத்தில் எக்ஸ்குளூசிவ் செய்திகள் என நினைத்தது அனைத்தும் தமிழக அரசின் செய்தி குறிப்பாக அனைத்து மீடியாக்களுக்கும் அனுப்பப்பட்டது.

இதை அறிந்து நொந்து போனார் என் செய்தி ஆசிரியர். இவர் பேட்டி எடுக்கும் போது கருணாநிதியின் நிழலான சண்முகநாதனும் அங்கேயே இருந்து நோட்ஸ் எடுத்துள்ளார் என்பது பிறகுதான் தெரிய வந்தது. தமிழக அரசியலில் எதிரும் புதிருமாக இருந்த கருணாநிதியும் ஜெயலலிதாவும் மீடியா விஷயத்திலும் இரு துருவங்கள்தான்.

- அ.வைத்தியநாதன்

Image 1547904

அ.வைத்தியநாதன், 30 ஆண்டுக்கும் மேலாக டில்லியில் செய்தியாளராக பணியாற்றியவர்.

தொடர்புக்கு: mailto:vaithi@dinamalar.in






      Dinamalar
      Follow us