தேசிய ஆளுமையாக திகழ்ந்தவர் கருணாநிதி... புகழாரம்!: நினைவு நாணயம் வெளியிட்ட ராஜ்நாத்சிங் பேச்சு
தேசிய ஆளுமையாக திகழ்ந்தவர் கருணாநிதி... புகழாரம்!: நினைவு நாணயம் வெளியிட்ட ராஜ்நாத்சிங் பேச்சு
UPDATED : ஆக 19, 2024 02:33 AM
ADDED : ஆக 18, 2024 11:21 PM

சென்னை: ''மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி, மாநில எல்லைகளை கடந்து, தேசிய ஆளுமையாக திகழ்ந்தார்,'' என, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம் சூட்டினார்.
கருணாநிதி நுாற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது. விழாவில், கருணாநிதி உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட, முதல்வர் ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.
விழாவில், ராஜ்நாத் சிங் பேசியதாவது:
கருணாநிதி இந்திய அரசியலில் அசைக்க முடியாதவராக இருந்தார்; சமூக நீதிக்காக பாடுபட்டார். அவரது பணி தமிழகத்திற்கு மட்டுமின்றி, நாட்டு மக்களுக்காக இருந்தது. கருணாநிதியின் அரசியல் பயணம் மற்றும் அர்ப்பணிப்பு மக்களுக்காக இருந்தது.
ஐந்து முறை
அவரது அரசியல் போராட்டங்கள் தீவிரமானவை; துணிச்சல் மிக்கவை. மாநில எல்லைகளை கடந்து, தேசிய ஆளுமையாக திகழ்ந்தார். தமிழக முதல்வராக ஐந்து முறை பதவி வகித்துள்ளார்.
ஆட்சியின் போது சாதாரண மக்களுக்காக பாடுபட்டார். நம் நாட்டில், 1973 வரை, சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று கவர்னர்கள் தேசியக் கொடியேற்றினர். இதற்கு எதிராக கருணாநிதி குரல் எழுப்பினார். மாநில முதல்வர்கள் தேசியக் கொடியேற்ற அனுமதிக்க வேண்டும் என்றார்.
அதனால், 1974 முதல், சுதந்திர தின விழாவில், மாநில முதல்வர்கள் கொடியேற்றும் நடைமுறை கொண்டு வரப்பட்டது. தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, முதன் முறையாக தேசியக் கொடியேற்றினார்.
கருணாநிதியின் பொது நல தொண்டால், நாட்டிற்கே நன்மை ஏற்பட்டுள்ளது. 1960 முதல் தற்போது வரை ஆதிக்கம் செலுத்தும் கட்சியாக, தி.மு.க.,வை வளர்த்தவர் கருணாநிதி. கூட்டாட்சி தத்துவத்திற்கு பாடுபட்டவர்; நாட்டு நலனுக்காக குரல் கொடுத்தவர்.
தமிழகம் மற்றும் இந்தியாவின் அரசியல் வரைபடத்தை உருவாக்குவதில் கருணாநிதிக்கு முக்கிய பங்கு உண்டு.
பல்வேறு தேசிய கட்சிகளுடன் நல்லுறவை பேணி வந்தார். வாஜ்பாய் அரசில், பா.ஜ., உடன் தி.மு.க., கூட்டணி அமைத்து அமைச்சரவையில் இடம் பெற்றது.
தமிழ் அடையாளத்தில் ஆழமாக வேரூன்றியவர் கருணாநிதி. எனினும், நாட்டின் ஒற்றுமையை குலைக்க பிராந்தியவாதத்தை ஒரு போதும் அனுமதிக்கவில்லை.
கருணாநிதி தேசிய நிர்வாகத்திலும், ஜனநாயக கொள்கைகளுக்காக வாதிடும் தலைவராகவும், இந்திய ஜனநாயகத்தில் அழியாத முத்திரையை பதித்துள்ளார்.
33 சதவீத இட ஒதுக்கீடு
ஒதுக்கப்பட்டவர்களுக்கு தரமான கல்வி வழங்குவதிலும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றுவதிலும் அவர் கவனம் செலுத்தினார்.
பெண்கள் மற்றும் விளிம்பு நிலை சமூகங்களின் உரிமைகளுக்காகவும், பாலின சமத்துவத்துக்காகவும் பாடுபட்டார். பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் முன்னோடி சீர்திருத்தங்களுக்கு வழிகாட்டினார்.
உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை தன் ஆட்சியில் கொண்டு வந்தார். மகளிர் பொருளாதாரத்தில் முன்னேற, மகளிர் சுயஉதவி குழுக்களை துவக்கினார்.
விவசாய தொழிலாளர்கள், திருநங்கையர் உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான நல வாரியங்களை உருவாக்கினார்.
அவர் திறமையான நிர்வாகி, மக்களின் குறைகளை தீர்க்க, 'மனு நீதி' திட்டத்தை அறிமுகப்படுத்தினார். வாரத்தில் ஒரு நாள் அதிகாரிகள், மக்களின் பிரச்னைகளை கேட்டறிந்து தீர்வு காண வழிவகுத்தார். அவர் முதல்வராக இருந்த போது, கல்வி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிலும், மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதிலும் கவனம் செலுத்தினார்.
அவரது பார்வை தமிழகத்தோடு நின்று விடவில்லை. மாநிலத்தின் முன்னேற்றம் ஒட்டு மொத்த நாட்டின் முன்னேற்றத்திற்கு முக்கியம் என்பதை உணர்ந்தார். அவரது பணி, தன்னம்பிக்கை மற்றும் முன்னேற்றத்திற்கு சான்றாகும். நாட்டின் வளர்ச்சிக்கு, மாநிலத்தின் வளர்ச்சி இன்றியமையாதது என்பதை, அவரது மரபு நினைவூட்டுகிறது.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு, ஜனநாயகம் மற்றும் கூட்டுறவு கூட்டாட்சியின் சக்தியை நம்புகிறது. இந்தியா தன் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதோடு, ஜனநாயகத்திற்கு வளர்ச்சியை அளிக்கிறது.
கருணாநிதி சிறந்த எழுத்தாளராக, கவிஞராக, நாடக ஆசிரியராக திகழ்ந்தார். அவரது படைப்புகள் தமிழ் இலக்கியம் மற்றும் சினிமாவை வளப்படுத்தியது. தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தை மேம்படுத்தியது.
வளர்ச்சிக்கான அரசின் அர்ப்பணிப்பு, பாகுபாடான அரசியலுக்கு அப்பாற்பட்டது. அதற்கு எடுத்துக்காட்டாக, உ.பி., மற்றும் தமிழகத்தில், பாதுகாப்பு தொழில் வழித்தடம் அமைக்கப்படுகிறது. இங்கு பாதுகாப்பு துறைக்கு தேவையான தளவாடங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அமைய உள்ளன. இறக்குமதியை நாடு சார்ந்திருப்பதை குறைக்கவும், முதலீட்டை ஈர்க்கவும், புதுமைகளை ஊக்குவிக்கும் வகையிலும், இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் வடக்கு, தெற்கு மாநிலங்களுக்கு இருந்த தொடர்பை நினைவுப்படுத்தும் வகையில், காசி தமிழ் சங்கமம், சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த, பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்தார். கருணாநிதி வாழ்க்கையில் இருந்து, இளம் இந்தியர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது, சொந்த மதிப்பீடுகளுக்கு உண்மையாக இருப்பதாகும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
முன்னதாக அமைச்சர் துரைமுருகன் வரவேற்றார். தமிழக அரசின் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா நன்றி கூறினார்.

