கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: த.வெ.க., ஆனந்த் முன்ஜாமின் மனு தள்ளுபடி
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: த.வெ.க., ஆனந்த் முன்ஜாமின் மனு தள்ளுபடி
ADDED : அக் 04, 2025 02:14 AM

மதுரை:கரூர் வேலுச்சாமிபுரத்தில் த.வெ.க.,பிரசார கூட்டத்தில் அதன் தலைவர் விஜய் பேசியபோது நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியாகினர். இவ்வழக்கில் த.வெ.க.,பொதுச் செயலர் ஆனந்த், இணைச் செயலர் நிர்மல்குமாரின் முன்ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
ஆனந்த் தாக்கல் செய்த முன்ஜாமின் மனு:
அரசியல் காரணங்களுக்காக பொய் வழக்கு பதியப்பட்டுள்ளது. சம்பவத்திற்கும், எனக்கும் தொடர்பில்லை. போலீசார் போதிய பாதுகாப்பு அளிக்கத் தவறினர். கூட்டம் நடத்துவதற்கேற்ப பெரிய இடத்தை ஒதுக்குமாறு எஸ்.பி.,யிடம் மனு அளித்தோம். ஒதுக்கவில்லை.
அரசு இயந்திரம்
கூட்டத்தில் சில குண்டர்கள் நுழைந்தனர். விஜய் பேசியபோது காலணிகளை வீசினர். நோயாளி இல்லாத ஆம்புலன்ஸ் கூட்டத்தில் நுழைந்ததால் நெரிசல் ஏற்பட்டது. கூட்டத்தினரை கட்டுப்படுத்த அரசு இயந்திரம் தவறிவிட்டது. முன்ஜாமின் அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதுபோல் நிர்மல்குமாரும் முன்ஜாமின் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுக்களை நீதிபதி எம்.ஜோதிராமன் விசாரித்தார். அப்போது நடந்த விவாதம்:
அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா.கதிரவன்: ஆனந்த் முன்னாள் எம்.எல்.ஏ.,என்பதால் அவரது மனுவை சென்னை உயர் நீதிமன்ற சிறப்பு அமர்விற்கு மாற்ற வேண்டும்.
கூட்டத்தினரை மனுதாரர்கள் ஒழுங்குபடுத்த தவறினர். விஜய் 23 கி.மீ.,'ரோடு ஷோ' நடத்தினார். இதனால் கூட்டம் திசை மாறியது. 'ரோடு ஷோ'விற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு குடிநீர் வழங்கவில்லை. இதனால் நீர்ச்சத்து இழப்பு ஏற்பட்டது. நீர்ச்சத்து இழப்புதான் மரணத்திற்கு காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பவம் நடந்ததும் மனுதாரர்கள் தலைமறைவாகிவிட்டனர்.
மனுதார் தரப்பு வழக்கறிஞர்: மக்களை வேண்டுமென்றே காக்க வைத்து விஜய் தாமதமாக வந்தது போல் சித்தரிக்கப்படுகிறது. இது திட்டமிட்ட செயல் அல்ல. நடந்தது விபத்து. மனு தாரர்களால் ஒட்டுமொத்த கூட்டத்தையும் கட்டுப் படுத்த இயலாது.
ரசாயனங்கள்
வேலுச்சாமிபுரம் போக்குவரத்து மிகுந்த குறுகிய சாலை என்பது மனுதாரர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அங்கு போலீசார் அனுமதி மறுத்திருக்க வேண்டும். கூட்டம் அதிகம் வரலாம் என போலீசார் முன்கூட்டியே கணித்திருக்க வேண்டும். அதில் மனுதாரர்கள் நிபுணத்துவம் பெற்றவர்கள் அல்ல.
கூட்டத்தில் சிலர் காலணி மற்றும் சில ரசாயனங்களை எறிந்தனர். உடனே போலீசார் எவ்வித எச்சரிக்கை அறிவிப்பும் செய்யாமல் தடியடி நடத்தினர். இதனால் நெரிசல் ஏற்பட்டது.
நீதிபதி: இறந்தவர் களின் குடும்ப நிலையை நீதிமன்றம் கருத்தில் கொள்கிறது.
மனுதாரர்கள் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் என்ற முறையில் அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
இவ்வழக்கு நீதிமன்றத்தை தொந்தரவு செய்கிறது. மூத்த ஐ.பி.எஸ்.,அதிகாரி தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. கரூரில் நிகழ்ச்சிக்கு போலீசார் மதியம் 3:00 முதல் இரவு 10:00 மணிவரை அனுமதியளித்துள்ளனர்.
ஆனந்த் மற்றும் நிர்மல்குமார் இரண்டாவது மற்றும் மூன்றாவது எதிரிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். வழக்கில் தொடர்புடைய த.வெ.க., நிர்வாகிகள் மதியழகன், பவுன்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெரிசலில், 41 பேர் இறந்துள்ளனர்; 100 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் பலர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். விசாரணை துவக்க கட்டத்தில் உள்ளது.
சம்பவத்தின் தன்மையை கருதில் கொண்டு முன்ஜாமின் வழங்க விரும்பவில்லை. தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.