ADDED : ஏப் 02, 2025 06:42 PM
சென்னை:''தி.மு.க., கொண்டு வந்துள்ள கச்சத்தீவு மீட்பு தீர்மானம், மீனவர்களின் ஓட்டுகளை பெறுவதற்கான நாடகம்,'' என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி தெரிவித்தார்.
கச்சத்தீவு மீட்கும் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்த, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின், சட்டசபையில் இருந்து வெளியே வந்தனர். எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கைகளில் பதாகைகளை ஏந்தியபடி நின்றனர். அதில், '18 ஆண்டுகள் மத்திய கூட்டணியில் அங்கம் வகித்தபோது, கச்சத்தீவை மீட்காமல் விட்டது ஏன்; கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தபோது கும்பகர்ண துாக்கம்; விடியா ஆட்சியின் பிரச்னைகளை மறைக்க நாடகமா என்பது போன்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.
பழனிசாமி அளித்த பேட்டி:
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, இந்திய எல்லைக்கு உட்பட்ட கச்சத்தீவு, இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. அப்போது, எம்.ஜி.ஆர்., கடுமையாக எதிர்த்தார். தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியில் இருந்தது. அன்று முதல் இன்று வரை, தமிழக மீனவர்கள், பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். மத்தியில் கூட்டணியில் இருந்தபோது, இதற்கு தீர்வு காணவில்லை. இது குறித்து சட்டசபையில், முழுமையாக பேச அனுமதி வழங்கவில்லை.
அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் வருகிறது. மீனவர்களின் ஓட்டுகளைப் பெற, தீர்மானம் நிறைவேற்றி, தி.மு.க., ஒரு நாடகத்தை அரங்கேற்றி உள்ளது. உண்மையிலேயே, மீனவர்களுக்கு துரோகம் செய்தது, தி.மு.க.,தான். நான்கு ஆண்டுகள் ஆட்சியில் இருந்துவிட்டு, முடியும் தருவாயில், கச்சத்தீவு தீர்மானம் கொண்டு வருகின்றனர்.
தி.மு.க., வில், 39 எம்.பி.,க்கள் இருக்கின்றனர். அவர்கள் ஏன் கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை. பார்லிமென்ட்டில் ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை. மீனவர்கள் மீது, தி.மு.க.,வுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோதே மீட்டிருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

