கவரைப்பேட்டை ரயில் விபத்து 2 நாள் விசாரணை நிறைவு -
கவரைப்பேட்டை ரயில் விபத்து 2 நாள் விசாரணை நிறைவு -
ADDED : அக் 17, 2024 11:08 PM
சென்னை:கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக, இரண்டு நாட்களாக நடந்த விசாரணை நேற்று முடிந்தது. 'சிக்னல், இன்டர்லாக்கிங்' உள்ளிட்ட செயல்பாடுகள் குறித்து, ரயில் பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி விசாரணை நடத்தினார்.
கர்நாடக மாநிலம், மைசூரில் இருந்து பீஹார் மாநிலம் தர்பங்கா சென்ற பாக்மதி ரயில், கடந்த 11ம் தேதி காலை 10:30 மணிக்கு, திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டையில் நின்றிருந்த சரக்கு ரயில் மீது மோதியது.
விபத்து நடந்த இடத்தில், தென் மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி ஆய்வு செய்தார். ரயில் ஓட்டுனர்கள், சிக்னல், நிலைய மேலாளர்கள் உட்பட 13 பிரிவு அதிகாரிகளிடம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.
இந்த விபத்து குறித்த இரண்டு நாட்கள் விசாரணை, சென்னையில் உள்ள கோட்ட தலைமை அலுவலகத்தில் நடந்து வந்தது; நேற்று இரவு முடிந்தது.
விசாரணையில், தெற்கு ரயில்வே முதன்மை தலைமை பாதுகாப்பு அதிகாரி கணேஷ், சென்னை கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா, கோட்ட பாதுகாப்பு அதிகாரி பாலமுரளி உட்பட 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
பாக்மதி ரயில் ஓட்டுனர், உதவி ரயில் ஓட்டுனர், ரயில் நிலைய மேலாளர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
குறிப்பாக, 'சிக்னல், இன்டர்லாக்கிங்' உள்ளிட்ட செயல்பாடுகள் குறித்து, தென்மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி விசாரணை மேற்கொண்டார். விசாரணை அறிக்கை, 10 நாட்களில் ரயில்வே வாரியத்திடம் அளிக்கப்படும் என தெரிகிறது.