கவின் ஆணவ கொலை: 2 மாதத்தில் இறுதி அறிக்கை உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்
கவின் ஆணவ கொலை: 2 மாதத்தில் இறுதி அறிக்கை உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்
ADDED : ஆக 05, 2025 11:29 PM
மதுரை:'கவின் ஆணவ கொலை வழக்கு விசாரணையை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் இரண்டு மாதங்களில் முடித்து, இறுதி அறிக்கை தாக்கல் செய்வர்' என, தமிழக அரசு தரப்பு, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்தது.
துாத்துக்குடி, புதுக்கோட்டை பொன் காந்திமதிநாதன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், 'கவின் ஆணவ கொலை வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது. நியாயமான விசாரணை மேற்கொள்ள மாவட்ட நீதிபதி கண்காணிக்க வேண்டும்.
ஆணவ கொலையை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என, தமிழக தலைமை செயலர், உள்துறை செயலர், டி.ஜி.பி.,க்கு மனு அனுப்பினேன். நடவடிக்கைக்கு உத்தரவிட வேண்டும்' என, குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது.
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் பினேகாஸ், 'சுர்ஜித் தாயை இதுவரை போலீசார் கைது செய்யவில்லை. ஒரு போலீஸ் அதிகாரி சம்பவத்திற்கு முன்பே கவினை மிரட்டியுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட குடும்பத்திற்கு ஆதரவாக செயல்பட்டுள்ளார். அந்த அதிகாரி சம்பந்தப்பட்ட மொபைல் போன் உரையாடல் விபரங்களை போலீசார் சேகரிக்கவில்லை. சம்பவ இடத்தில் கலெக்டர், போலீஸ் கமிஷனர் ஆய்வு செய்யவில்லை' என, வாதிட்டார்.
அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அஜ்மல்கான், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் செந்தில்குமார், 'ஜூலை, 27 மதியம், 2:30 மணிக்கு சம்பவம் நடந்தது.
'மாலை, 5:00 மணிக்கு வழக்கு பதியப்பட்டது. இரவு, 7:30 மணிக்கு, சுர்ஜித் கைது செய்யப்பட்டார். வழக்கு விசாரணை ஜூலை, 30ல் சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்பட்டது. மூன்று மொபைல் போன்கள், ஏழு கண்காணிப்பு கேமரா காட்சிகள் தடய அறிவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
'கவின் குடும்பத்திற்கு, இடைக்காலமாக 6 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. மீதம், 6 லட்சம் ரூபாயை கீழமை நீதிமன்றத்தில் போலீசார் இறுதி அறிக்கை தாக்கல் செய்தபின் வழங்கப்படும். விசாரணை முறையாக நடக்கிறது.
'சம்பவ இடத்தை கலெக்டர், போலீஸ் கமிஷனர் பார்வையிட்டனர். இதுபோன்ற மூன்றாம் நபர் தலையீடால் விசாரணைக்கு இடையூறு ஏற்படும். சி.பி.சி.ஐ.டி., போலீசார் கீழமை நீதிமன்றத்தில், இரண்டு மாதங்களில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்வர்' என, விவாதம் நடந்தது.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
விசாரணை விரைவாக நடக்கிறது. அதில் தேவையின்றி குறுக்கிட வேண்டாம். மனுதாரர் தன்னிடம் உள்ள விபரங்களை சி.பி.சி.ஐ.டி., வசம் ஒப்படைக்கலாம்.
தவறு செய்தவர்கள் தப்பிக்கக் கூடாது. சி.பி.சி.ஐ.டி., இறுதி அறிக்கையை, இரண்டு மாதங்களில் தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை, 8 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது.
இவ்வாறு உத்தர விட்டனர்.
இதற்கிடையில், கவின் செல்வகணேஷ் கொலை வழக்கில் கைதாகி உள்ள, சுர்ஜித் தாயான எஸ்.ஐ., கிருஷ்ணகுமாரி, வரும் 15ம் தேதிக்குள் விசாரணைக்கு ஆஜராக, சி.பி.சி.ஐ.டி., போலீசார், 'சம்மன்' அனுப்பி உள்ளனர்.
இதற்கிடையே தேசிய பட்டியலின பழங்குடி ஆணைய தலைவர் கிஷோர் மக்வானா தலைமையிலா ன குழுவினர் நேற்று நெல்லையில் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டார். சி.பி.சி.ஐ.டி., -- டி.எஸ்.பி., ராஜ்குமார் நவ்ரோஜிடமும் விசாரித்து, வழக்கை முறையாக விரைந்து நடத்தவு ம், குற்றவாளிகளை தப்ப விடக் கூடாது எனவும் தெரிவித்தனர்.