உறவை சீர்குலைக்க கேரள அரசு முயற்சி: தலைவர்கள் கண்டனம்
உறவை சீர்குலைக்க கேரள அரசு முயற்சி: தலைவர்கள் கண்டனம்
ADDED : ஜன 27, 2024 02:07 AM

சென்னை: தமிழக - கேரள உறவுகளை சீர்குலைக்க, கேரள அரசு முயற்சிப்பதாக பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
முல்லைப் பெரியாறு அணை வலுவிழந்து உள்ளதால், அதற்கு மாற்றாக புதிய அணை கட்ட, அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என, கேரள அரசு அறிவித்துள்ளது.
இது தமிழக அரசையும், தமிழக மக்களையும் சீண்டிப் பார்க்கும் செயல். முல்லைப் பெரியாறு அணை வலுவாக இருப்பதாகக் கூறி, இந்த சிக்கலுக்கு உச்ச நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்து விட்டது. ஆனாலும், இப்பிரச்னையை மீண்டும் மீண்டும் எழுப்புவது, உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் மட்டுமின்றி, இரு மாநில உறவுகளை சீர்குலைக்கும் முயற்சி.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்த்தேக்க உயரத்தை, 152 அடியாக உயர்த்துவதை தாமதப்படுத்த வேண்டும் என்பதே, கேரள அரசின் நோக்கம். முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கான எந்த தேவையும் இப்போது எழவில்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

