கேரள உள்ளாட்சி தேர்தல் தி.மு.க., - வி.சி., கட்சிகளை கழற்றி விட்ட காங்கிரஸ்
கேரள உள்ளாட்சி தேர்தல் தி.மு.க., - வி.சி., கட்சிகளை கழற்றி விட்ட காங்கிரஸ்
ADDED : நவ 24, 2025 12:00 AM
மூணாறு: கேரள உள்ளாட்சித் தேர்தலில், அம்மாநிலத்தில் செல்வாக்குடன் இருக்கும் காங்கிரஸ், தமிழகத்தில் கூட்டணியில் இருக்கும் தி.மு.க., - விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளை கழற்றி விட்டு, தனியாக களம் காண்கிறது.
கேரளாவில் டிச., 9 மற்றும் 11ல், இரு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. 'இண்டி' கூட்டணியின் பிரதான கட்சிகளான காங்கிரசும், கம்யூனிஸ்டுகளும் அம்மாநிலத்தில் எதிரும் புதிருமாக உள்ளன. இந்த தேர்தலிலும், ஆளும் கம்யூனிஸ்ட் கூட்டணியும், எதிர்க்கட்சியான காங்., கூட்டணியும் எதிரெதிராக போட்டியிடுகின்றன.
தமிழகத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் இந்த கூட்டணிகளுக்கு, தமிழக கட்சிகளான தி.மு.க., விடுதலை சிறுத்தை ஆகியவை ஆதரவு அளிப்பது வழக்கம். தமிழகத்தில் கூட்டணியில் இருப்பதால், தி.மு.க., - வி.சி., ஆகிய கட்சிகளுக்கு கடந்த தேர்தல்களில், காங்., 'சீட்' ஒதுக்கி போட்டியிட்டது. ஆனால், இந்த தேர்தலில் அக்கட்சிகளை காங்., கழற்றி விட்டுள்ளது.
இதனால், அவை தனித்தனியாக போட்டியிடுகின்றன. இடுக்கி மாவட்டத்தில் உப்புதரா ஊராட்சியில் 9; சின்னக்கானல் ஊராட்சியில் 3; தேவிகுளம், மறையூர் ஊராட்சிகளில் தலா 1; தேவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் 1 என 15 வார்டுகளில் தி.மு.க., போட்டியிடுகிறது.
பீர்மேடு ஊராட்சி ஒன்றியத்தில் 1; உப்புதரா ஊராட்சியில் 6; பீர்மேடு, குமுளி, ஏலப்பாறை, சாந்தாம்பாறை ஊராட்சிகளில் தலா 1 என, 11 வார்டுகளில் வி.சி., போட்டியிடுகிறது.
அதேபோல், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் பா.ஜ., அம்மாவட்டம் முழுதும் போட்டியிடுகிறது. கூட்டணியில் இருக்கும் அ.தி.மு.க., தனியாகவே, 16 வார்டுகளில் போட்டியிடுகிறது.

