ரூ.4 கோடி விவகாரத்தில் மீண்டும் கேசவ விநாயகனிடம் விசாரணை
ரூ.4 கோடி விவகாரத்தில் மீண்டும் கேசவ விநாயகனிடம் விசாரணை
ADDED : அக் 08, 2024 01:32 AM

சென்னை: லோக்சபா தேர்தலின்போது, ரயிலில் பிடிபட்ட 4 கோடி ரூபாய் யாருக்கு சொந்தமானது என்பது குறித்து, பா.ஜ., நிர்வாகி கேசவ விநாயகனிடம், சி.பி.சி.ஐ.டி., போலீசார் இரண்டாவது முறையாக விசாரித்து வாக்குமூலம் பெற்றனர்.
லோக்சபா தேர்தலில், திருநெல்வேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளராக நயினார் நாகேந்திரன் போட்டியிட்டார்.
அப்போது, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தாம்பரம் ரயில் நிலையத்தில் நடத்திய சோதனையில், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் எடுத்துச் செல்லப்பட்ட 4 கோடி ரூபாயை பறிமுதல் செய்தனர்.
அந்த பணத்தை எடுத்துச் சென்ற நயினார் நாகேந்திரன் ஹோட்டல் ஊழியர் மற்றும் உறவினரும் சிக்கினர்.
இதுகுறித்து, நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின், இந்த வழக்கு, சி.பி.சி.ஐ.டி., போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது.
அவர்கள், பா.ஜ., நிர்வாகிகளான எஸ்.ஆர்.சேகர், கேசவ விநாயகன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரிடம் விசாரித்துள்ளனர்.
இதற்கிடையே, ரயில்வே கேன்டீன் உரிமையாளர் முஸ்தபா, பணத்திற்கு உரிமை கோரினார்.
அவரின் வங்கி கணக்கு, வரவு - செலவு விபரங்களை ஆய்வு செய்த சி.பி.சி.ஐ.டி., போலீசார், பணம் முஸ்தபாவுக்கு சொந்தமானது இல்லை என்பதை உறுதி செய்தனர். இதைஅடுத்து விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, அவருக்கு 'சம்மன்' அனுப்பி உள்ளனர்.
அதேபோல், எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி., தலைமை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என, கேசவ விநாயகனுக்கும், சம்மன் அனுப்பினர். அதன்படி அவர், நேற்று காலை 11:00 மணிஅளவில் விசாரணைக்கு ஆஜரானார்.