முக்கிய புள்ளிகள் மிரட்டல்: தனியார் பள்ளிகள் அச்சம்
முக்கிய புள்ளிகள் மிரட்டல்: தனியார் பள்ளிகள் அச்சம்
ADDED : ஜூலை 09, 2026 12:25 AM
சென்னை: தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க, பல கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்ட விவகாரத்தில், முக்கிய புள்ளிகளின் மிரட்டலால், பள்ளிகள் புகார் கொடுக்க தயங்குவதாக, தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் இயங்கும் தனியார் பள்ளிகளுக்கு, அங்கீகாரம் மற்றும் தடையில்லா சான்று வழங்க, கடந்த தி.மு.க., ஆட்சியில், லஞ்சம் பெறப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
ஆனால், தனியார் பள்ளி நிர்வாகிகள், புகார் அளிக்க முன்வரவில்லை. இந்த சூழலில், தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி பொறுப்பேற்றதும், பல்வேறு தனியார் பள்ளிகள், சட்டவிரோத வசூல் நடவடிக்கை குறித்து, புகார்கள் அளிக்க தொடங்கின. அதன்படி, 100 கோடி ரூபாய் வரை லஞ்சம் பெற்றதாக பெறப்பட்ட புகார் அடிப்படையில், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் என்ற பதிவு செய்யப்படாத சங்க நிறுவனத் தலைவர் அரசகுமார் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், தனியார் பள்ளிகளுக்கு, அங்கீகாரம் வழங்க, பணம் வசூலிக்கப்பட்டது தொடர்பாக, யாரும் புகார் அளிக்கக் கூடாது என, மர்ம நபர்கள், தனியார் பள்ளி நிர்வாகிகளை மிரட்டுவதாகவும், அதனால் அவர்கள் புகார் கொடுக்க அஞ்சுவதாகவும், தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து, தனியார் பள்ளி சங்க வட்டாரங்கள் கூறியதாவது:
அங்கீகாரம் வழங்க, ஒவ்வொரு பள்ளியிடமும் 30 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை லஞ்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான புகாரில், அரசகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், பலர் புகார் அளிக்க முன்வரும் நிலையில், அரசகுமாருக்கு நெருக்கமான சிலர், அவர்களை அச்சுறுத்தி உள்ளனர். எனினும், இந்த விவகாரத்தில், உரிய சட்ட நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்வோம்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
