காங்கிரஸ் தொகுதிகள் முடிவாகாமல் இழுபறி: தள்ளிப்போகிறது கார்கேயின் சென்னை வருகை
காங்கிரஸ் தொகுதிகள் முடிவாகாமல் இழுபறி: தள்ளிப்போகிறது கார்கேயின் சென்னை வருகை
ADDED : பிப் 08, 2024 03:52 AM

தொகுதி பங்கீட்டில், தி.மு.க., - காங்கிரஸ் இடையே இழுபறி நீடிப்பதால், காங்கிரஸ் தலைவர் கார்கே சென்னை வருகை, அடுத்த வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தி.மு.க., - காங்கிரஸ் இடையே, தொகுதி பங்கீடு தொடர்பாக, முதல் கட்ட பேச்சு, ஜன., 28ல், சென்னை அறிவாலயத்தில் நடந்தது. தி.மு.க., சார்பில், டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, திருச்சி சிவா, ஆ.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
காங்கிரஸ் சார்பில் முகுல் வாஸ்னிக், சல்மான் குர்ஷித், மேலிட பொறுப்பாளர் அஜோய்குமார், தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி ஆகியோர் பங்கேற்றனர்.
காங்கிரஸ் சார்பில், 21 தொகுதிகள் பட்டியல் வழங்கப்பட்டு, அதில், 12 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்குமாறு கேட்டிருந்தனர். தி.மு.க., தரப்பில், 'ஆரணி, திருவள்ளூர், திருச்சி, கரூர், சிவகங்கை' ஆகிய 5 தொகுதிகளை, மீண்டும் காங்கிரசுக்கு ஒதுக்க முடியாது' என, திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
கடந்த லோக்சபா தேர்தலில் புதுச்சேரியுடன், 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, 9 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. தற்போது, புதுச்சேரியுடன் சேர்த்து, காங்கிரசுக்கு 7 தொகுதிகளை ஒதுக்கலாம் என தி.மு.க., திட்டமிட்டுள்ளது.
இதை முதல் கட்ட பேச்சின் போது, தி.மு.க., குழுவினர் காங்கிரசாரிடம் சொல்லி விட்டனர். அதையடுத்தே, அன்றைய தினம் உடன்பாடு எதுவும் எட்டப்படாமல், அடுத்தகட்டமாகவும் பேசலாம் என உடன்பாட்டுக்கு வந்தனர்.
குறிப்பாக, தமிழகத்துக்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டுக்குச் சென்றிருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின் திரும்பி வந்ததும், மீண்டும் பேச்சை தொடரலாம் என்றும் இரு தரப்பினரும் பேசி முடித்து, அன்றைய தினம் கலைந்து சென்றனர்.
இந்நிலையில், தமிழக முதல்வர் ஸ்பெயினிலிருந்து தமிழகம் திரும்பி விட்ட நிலையில், அடுத்த கட்ட பேச்சை நாளைக்கு வைத்துக் கொள்ளலாம் என, காங்கிரசுக்கு, தி.மு.க., தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், காங்கிரஸ் தரப்பில் கூட்டத்துக்கு யார் யார் பங்கேற்கப் போகின்றனர் என்ற விபரம் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இதற்கிடையில், வரும் 13ம் தேதி சென்னையில் நடக்க இருந்த பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க, காங்கிரஸ் தலைவர் கார்கே வருகிறார் என்றும், அன்றைய தினம் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, தொகுதி பங்கீட்டை இறுதி செய்வார் என்றும் கூறப்பட்டது.
ஆனால், தொகுதி எண்ணிக்கை முடிவாகாததால், கார்கேயின் சென்னை வருகை, வரும் 18, 19ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்கிறது, காங்கிரஸ் வட்டாரம்
- நமது நிருபர் -.

