கிட்னி திருட்டு புரோக்கர்கள் சென்னை புறநகரில் பதுங்கல்
கிட்னி திருட்டு புரோக்கர்கள் சென்னை புறநகரில் பதுங்கல்
ADDED : நவ 21, 2025 07:39 AM

சென்னை: கிட்னி திருட்டு வழக்கில் தேடப்பட்டு வரும் புரோக்கர்கள், சென்னை புறநகர் பகுதிகளில் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, பள்ளிப்பாளையம், குமாரபாளையம் பகுதியில், ஏழை குடும்பங்களைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளர்களிடம் கிட்னி திருட்டு நடந்துள்ளது.
மருத்துவமனைகளிடம் இருந்து, 30 - 50 லட்சம் ரூபாய் வரை வசூல் செய்து வந்த புரோக்கர்கள், கிட்னியை தந்தவர்களிடம், இரண்டு அல்லது மூன்று லட்சம் கொடுத்து, மிகப்பெரிய அளவில் மோசடி செய்துள்ளனர்.
கிட்னி திருட்டு தொடர்பாக, தெற்கு மண்டல ஐ.ஜி., பிரேம் ஆனந்த் சின்கா தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது.
கிட்னி திருட்டு கும்பலைச் சேர்ந்த ஸ்டான்லி மோகன், 48, ஆனந்த், 45, உள்ளிட்டோரை கைது செய்துள்ளனர். இவர்களின் கூட்டாளிகள், சென்னை புறநகர் பகுதியில் பதுங்கி இருப்பதாக, சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில், புரோக்கர்களை தேடும் பணி நடப்பதாக, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

