ADDED : ஜூலை 24, 2025 12:31 AM
சென்னை:சிறுநீரக மாற்று சிகிச்சை முறைகேடில் ஈடுபட்டதாக புகார் எழுந்த நிலையில், இரண்டு தனியார் மருத்துவமனைகள், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தில் சிறுநீரகம் விற்றதாக வந்த செய்தியின் அடிப்படையில் , முறைகேடான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை குறித்து விசாரித்து, விரிவான அறிக்கை சமர்ப்பிக்க, தமிழக சுகாதார திட்ட இயக்குநர் வினீத் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவில், மருத்துவ மற்றும் ஊரக நலத்துறை இணை இயக்குநர்கள் மீனாட்சி சுந்தரி, ராஜ்மோகன், மாரிமுத்து, போலீஸ் டி.எஸ்.பி., சீத்தாராமன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இக்குழுவினர், பெரம்பலுாரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, திருச்சியில் உள்ள சிதார் மருத்துவமனை ஆகியவற்றில் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணை அறிக்கை அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, சிதார் மருத்துவமனைகளுக்கு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வழங்கப்பட்ட உரிமம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

