ADDED : ஜன 18, 2024 01:22 AM
சென்னை:செயலிகள் வாயிலாக, உணவு வகைகளை, 'ஆர்டர்' செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, உணவை எடுத்துச் செல்லும் 'ஸ்விக்கி' உள்ளிட்ட நிறுவனங்களின் ஊழியர்கள், போக்குவரத்து விதிகளை மதிப்பது இல்லை என கூறப்படுகிறது. மின்னல் வேகத்தில், மற்ற வாகனங்களின் குறுக்கே பாய்ந்து செல்வதாக குற்றச்சாட்டு எழுகிறது.
இதையடுத்து, சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களில், அதி நவீன கேமரா வாயிலாக, மின்னல் வேக பயணம் மற்றும் சிக்னல்கள் மீறல் என, போக்குவரத்து விதிகளை மீறிய, உணவு வினியோக ஊழியர்கள், 600 பேரை படம் பிடித்து, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு, போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
உணவு வினியோக ஊழியர்களுக்கு, கட்டாயம் அடையாள அட்டை வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளோம்.
மற்ற குற்றவாளிகளும், உணவு வினியோக ஊழியர்கள் போல உடை அணிந்து குற்றங்களில் ஈடுபடுகின்றனர். இதனால், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட நபர்கள், உண்மையான ஊழியர்கள் தானா என, விளக்கம் கேட்டு உள்ளோம்.
உணவு வினியோகம், பெரும் வணிகமாக மாறிவிட்டது. அதனால், விதிமீறல் அபராதம் பெரிதாக தெரிவது இல்லை.
இதனால், சம்பந்தப்பட்ட ஊழியரை கண்காணிக்கும் அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்யவும், விதிமீறலில் ஈடுபட்ட நபரின் ஓட்டுனர் உரிமத்தை ஆறு மாதம் ரத்து செய்யவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.