கிளாம்பாக்கம் பஸ் நிலைய பிரச்னைகள் தீர்க்கப்படும்: ஸ்டாலின் பதில்
கிளாம்பாக்கம் பஸ் நிலைய பிரச்னைகள் தீர்க்கப்படும்: ஸ்டாலின் பதில்
ADDED : பிப் 13, 2024 12:02 PM

சென்னை: ''கிளாம்பாக்கம் பஸ் நிலையம் தொடர்பாக சிறுசிறு பிரச்னைகள் மட்டுமல்ல, பெரும்பெரும் பிரச்னைகளும் இருந்திருக்கிறது; அதையெல்லாம் தீர்த்து வைத்துதான் திறந்திருக்கிறோம். ஏதேனும் பிரச்னை இருந்தால் அதையும் தீர்த்து வைக்க காத்திருக்கிறோம்'' என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார்.
புதிதாக திறந்துவைக்கப்பட்ட கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் போதிய பஸ் வசதி இல்லாமை போன்ற பல பிரச்னைகளை முன்வைத்து சட்டசபையில் இன்று (பிப்.,13) விவாதிக்கப்பட்டது. அப்போது எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான இ.பி.எஸ் பேசுகையில், ''கிளாம்பாக்கம் பஸ் நிலைய பிரச்னை குறித்து பயணிகள் சொல்லும் கருத்தின் அடிப்படையில் தான் அறிக்கை வெளியிட்டோம்.
கோவிட் காரணமாக பஸ் நிலைய பணிகள் பாதிக்கப்பட்டது. தற்போது திறக்கப்பட்டுள்ள பஸ் நிலையம், முழுமையாக பணி முடிந்த பிறகு திறந்திருந்தால் இந்த பிரச்னை முடிவுக்கு வந்திருக்கும், இப்போது வரக்கூடிய சிறுசிறு பிரச்னைகள் எல்லாம் தீர்க்கப்பட்டிருக்கும், இந்த விவாதமே நடந்திருக்காது'' என்றார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், ''எதிர்க்கட்சி தலைவர்கள் சொல்வது போல சிறுசிறு பிரச்னைகள் மட்டுமல்ல பெரும்பெரும் பிரச்னைகளும் இருந்திருக்கிறது; அதையெல்லாம் தீர்த்து வைத்து தான் திறந்திருக்கிறோம். இன்னும் ஏதேனும் பிரச்னை இருந்தால் சொல்லுங்கள், நேரடியாக வாருங்கள் அழைத்து செல்கிறோம். நீங்கள் சொல்லும் குறைகள் இருந்தால் அதனை தீர்த்து வைக்க காத்திருக்கிறோம். எனவே இத்தோடு இந்த பிரச்னையை முடித்துக்கொள்ளுங்கள்'' என பதிலளித்தார்.