ADDED : அக் 18, 2026 06:57 PM
சேலம்: விருதாச்சலத்தை சேர்ந்தவர் சர்தார் ஷெரீப் பைசல், 31; சேலம் முள்ளுவாடி கேட், மக்கான் தெருவில் குடும்பத்துடன் வசிக்கிறார். தனியார் இணைய வழி விற்பனை நிறுவனத்தில் பேக்கிங் வேலை செய்கிறார். ‘ஆக்டிங்’ டிரைவராகவும் பணிபுரிகிறார்.
அப்துல்லா அஜீஸ் என்பவர், தனக்கு வரும் வாடகையை, சில நேரங்களில் பைசலுக்கு பரிந்துரைப்பார். இந்த வகையில் அவருக்கான வாடகையை கொடுக்க, நேற்று முன்தினம் நள்ளிரவு, சேலம் புது பஸ் ஸ்டாண்ட் அருகே, ஹூண்டாய் ஆரா காருடன் பைசல் காத்திருந்தார்.
அப்போது வந்த, 45 வயது மதிக்கத்தக்க ஒருவர், தாரமங்கலம் வரை செல்ல வாடகைக்கு கேட்டுள்ளார். அவருடன் தாரமங்கலம் சென்று விட்டு சேலம் திரும்பினார்.
நேற்று அதிகாலை, 2:30 மணிக்கு கொல்லப்பட்டி அருகே வந்தபோது, வாடகைக்கு வந்தவர், காரை நிறுத்தினார். பின் பைசலிடம் ‘டீக்கடைக்கு சென்று தீப்பெட்டி வாங்கி வாருங்கள்’ என்றார். அவர் சென்ற நிலையில், காரை மர்ம ஆசாமி ஓட்டி சென்று விட்டார். அதிர்ச்சி அடைந்த பைசல், இரும்பாலை போலீசில் புகாரளித்தார். வாடகைக்கு அழைத்து சென்று, காரை கடத்தி சென்ற வில்லங்க ஆசாமியை, போலீசார் தேடி வருகின்றனர்.
