'நிடி ஆயோக்' பரிந்துரை விவசாயிகளுக்கு எதிரானது கிசான் சங்கத்தினர் குமுறல்
'நிடி ஆயோக்' பரிந்துரை விவசாயிகளுக்கு எதிரானது கிசான் சங்கத்தினர் குமுறல்
ADDED : ஜூன் 17, 2025 11:57 PM
மதுரை:அமெரிக்காவிலிருந்து விவசாய விளைபொருள் இறக்குமதிக்கான வரியைக் குறைக்க மத்திய அரசின் 'நிடிஆயோக்' செய்த பரிந்துரைகள் விவசாயிகளுக்கு எதிரானது'' என பாரதிய கிசான் சங்கத்தினர் எதிர்ப்பு குரல் எழுப்பினர்.
இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான விவசாய வர்த்தகத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் 'நிடிஆயோக்' ஒரு வரைவு அறிக்கையை வெளியிட்டு சில பரிந்துரைகளை வழங்கியுள்ளது. அதில் இந்தியா -- அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் (எப்.டி.ஏ.) கீழ் அரிசி, மிளகு, சோயாபீன் எண்ணெய், இறால், டீ, காபி, பால் பொருட்கள், கோழி, ஆப்பிள், பாதாம், பிஸ்தா, சோளம் மற்றும் மரபணு மாற்றப்பட்ட சோயா பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. இது தேசிய அளவில் கோடிக்கணக்கான விவசாயிகளை பாதிக்கும் நடவடிக்கையாக உள்ளது என பாரதிய கிசான் சங்க அகில இந்திய பொதுச் செயலாளர் மோகினி மோகன் மிஸ்ரா, துணைத்தலைவர் பெருமாள் தெரிவித்தனர்.
அவர்கள் கூறியதாவது:
எண்ணெய் வித்துக்களில் நாட்டை தன்னிறைவு பெறச் செய்ய 'ஆத்மநிர்பார்' திட்டத்தின் மூலம் மத்திய அரசு தயாராகி வருகிறது. இந்நிலையில் சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியைக் குறைப்பது என்பது முரண்பாடான முடிவு. நாட்டுக்கும் விவசாயிகளின் நலனுக்கும் எதிராக 'நிடி ஆயோக்' பரிந்துரை செய்துள்ளது. இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கிறோம். மரபணு மாற்றம் இல்லாத அனைத்து பயிர்களையும் இந்தியாவின் தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்துள்ளோம்.
மத்திய அரசின் கொள்கையான பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் தன்னிறைவு அடைய இந்திய விவசாயிகள் தயாராக உள்ளனர். எனவே அமெரிக்காவுடனான இறக்குமதி வரிவிதிப்பு போரில் 'நிடி ஆயோக்' பணிவது இந்தியாவிற்கு நல்லதல்ல. இந்த பரிந்துரையை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றனர்.

