அறிவுதான் சனாதன தர்மத்தின் பெரும் சொத்து 'ஸ்ரீ தமிழ்' இதழ் வெளியீட்டு விழாவில் சுவாமி மோக் ஷ வித்யானந்த சரஸ்வதி ஆசியுரை
அறிவுதான் சனாதன தர்மத்தின் பெரும் சொத்து 'ஸ்ரீ தமிழ்' இதழ் வெளியீட்டு விழாவில் சுவாமி மோக் ஷ வித்யானந்த சரஸ்வதி ஆசியுரை
ADDED : அக் 11, 2025 11:40 PM
சென்னை:'ஸ்ரீ தமிழ்' என்ற பெயரில், புதிதாக மாதம் இருமுறை இதழ், சென்னையில் வெளியிடப்பட்டது.
சென்னை தி.நகரில் உள்ள, ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி வளாகத்தில், 'ஸ்ரீடிவி' 10ம் ஆண்டு துவக்க விழா, நேற்று நடந்தது. விழாவில், ஸ்ருதி கேந்திரா டிரஸ்ட் நிறுவனர் சுவாமி மோக் ஷ வித்யானந்த சரஸ்வதி, ஹிந்து முன்னணி தென் பாரத அமைப்பாளர் பக்தவத்ஸலம், 'தினமலர்' நாளிதழ் இணை ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர், சி றப்பு விருந்தினர்களாக பங்கேற்று, 'ஸ்ரீ தமிழ்' எனும், மாதம் இருமுறை இதழை வெளியிட்டனர்.
விழாவில், இந்து தர்மத்தை காக்கும் பணியில் ஈடுபட்டதற்காக, ஹிந்து முன்னணி மாநில செயலர் குற்றாலநாதன், தென்திருப்பேரை மாரி துரைசாமி ஆகியோருக்கு, 'ஹிந்து தர்ம காவலர் விருது'கள் வழங்கி, கவுரவிக்கப்பட்டது.
மேலும், சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி கிராமத்திற்கு, 'ஹிந்து எழுச்சி கிராம விருது' வழங்கப்பட்டது. இந்த விருதை, அந்த கிராம மக்கள் பெற்றுக் கொண்டனர். விழாவில், ஸ்ருதி கேந்திரா டிரஸ்ட் நிறுவனர் சுவாமி மோக் ஷ வித்யானந்த சரஸ்வதியின் ஆசியுரை:
வீடுபேறு நம் பூமியை புண்ணிய பூமி என, சொல்கிறோம். ஏனெனில், இதில்தான் நாம் வீடுபேறு அடைய முடியும். வேறு எந்த பூமியிலும், அதை அடைய முடியாது. தேவலோகத்தில் போகத்தை அனுபவிக்கலாம். மிருகலோகத்திற்கு சென்றால், துன்பத்தை அடையலாம். ஆனால், இங்கு தான் இன்பமும், துன்பமும் இல்லாத வீடுபேறு அடைய முடியும். அதனால்தான், புண்ணிய பூமி என்கிறோம்.
வீடுபேறு என்பது என்ன? வீடுபேறு எனும் சொல்லுக்கு, விடுதல் என பொருள். இந்த விடுதல் என்பதை, 10 குறள்களின் வழியாக திருவள்ளுவர் அழகாக சொல்லியிருக்கிறார்.
கற்றதால் என்ன பயன் என திருவள்ளுவர் கேட்கிறார்; அதற்கு பதிலையும் அவரே தருகிறார். கடவுள், அன்பு, ஆனந்தமே அறிவுதான். இதை நம் மகான்கள் மீண்டும் மீண்டும் சொல்கின்றனர். இப்படி, காணக்கிடைக்காத அறிவுதான், சனாதன தர்மத்தின் பெரும் சொத்து. கற்றல், கற்பித்தல் எனும் இடத்திற்கு நாம் வந்தால், மூன்று விதமான பலத்தை நாம் பெறலாம்.
அதில், நாம் பலவீனமாக இருப்பதால்தான், நம்மை எல்லாரும் சீண்டியும், அசைத்தும் பார்க்கின்றனர். அதில், நாம் பலம் பெற்று விட்டால், நம்மை யாரும் அசைத்து பார்க்க முடியாது. அந்த மூன்றில் முதல் பலம், நாம் சார்ந்திருக்கும் சமய நெறிகள். எந்த நிலையிலும், எந்த தடைகள் வந்தாலும், அதை விடக்கூடாது.
மூன்று பலம் அதேபோல், மனதளவில் பலம் அவசியம். அதை காக்க வேண்டும் என்றால், பக்தி அவசியம். மூன்றாவது பலம், அறிவு பலம். அது வலிமையாக இருக்க வேண்டும் என்றால், கீதை, பெரியபுராணம், இதிகாசங்களை தொடர்ந்து படிக்க வேண்டும். இந்த மூன்று பலமும் நம்மிடம் இருந்தால், யாரும் நம்மை அசைத்து பார்க்க முடியாது. அந்த பலத்தை, நாம் அனைவரிடமும் பரப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும், ஹிந்து முன்னணி தென் பாரத அமைப்பாளர் பக்தவத்ஸலம், 'தினமலர்' நாளிதழ் இணை ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில், 'ஸ்ரீடிவி' இயக்குநர்கள் பத்மபிரியா, ஜெயராமன், சீனிவாசன், வேத விஞ்ஞான ஆராய்ச்சி மைய நிறுவனர் பாலகவுதமன் ஆகியோர் பங்கேற்றனர்.