கொச்சி -- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் நேரியமங்கலம் பாலம் கட்டுமான பணிகள் இடுக்கி எம்.பி., துவக்கி வைத்தார்
கொச்சி -- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் நேரியமங்கலம் பாலம் கட்டுமான பணிகள் இடுக்கி எம்.பி., துவக்கி வைத்தார்
ADDED : ஜன 22, 2024 06:30 AM

மூணாறு: கொச்சி-- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் நேரியமங்கலம் பகுதியில் முல்லைப் பெரியாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி துவங்கியது.
இந்த தேசிய நெடுஞ்சாலையில் இடுக்கி, எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களை இணைக்கும் வகையில் நேரியமங்கலம் பகுதியில் முல்லைப் பெரியாறு ஆற்றின் குறுக்கே பழமை வாய்ந்த பாலம் உள்ளது.
இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு, கொச்சி இடையே ரூ.1250 கோடி செலவில் ரோடு அகலப்படுத்துவதற்கு மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்தது.
அந்த நிதியில் நேரியமங்கலம் பகுதியில் 214 மீட்டர் நீளம், 1.5 மீட்டர் நடை பாதை உட்பட 11.5 மீட்டர் அகலத்தில் புதிய பாலம் கட்டப்படுகிறது. அதற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டிய நிலையில் புதிய பாலம் கட்டுமான பணிகளை இடுக்கி எம்.பி., டீன் குரியாகோஸ் தொடங்கி வைத்தார்.
பழமையான பாலம்
ஆங்கிலேயர் காலத்தில் வர்த்தக ரீதியாக மூணாறில் இருந்து கல்லார், மாங்குளம், ஆனக்குளம், பூயம்குட்டி வழியாக ஆலுவாவுக்கு போக்குவரத்து இருந்தது. மூணாறில் 1924ல் பெய்த மழை கடும் பேரழிவை ஏற்படுத்தியது. அதில் மூணாறு, ஆலுவா ரோடு சீரமைக்க இயலாத வகையில் சேதமடைந்தது. அதன் பின் தற்போதுள்ள கொச்சி தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை மூணாறு, ஆலுவா ரோடாக உருவானது. அப்போது நேரிய மங்கலம் பகுதியில் பெரியாறு ஆற்றின் குறுக்கே பாலம் கட்டுமான பணிகள் 1924ல் திருவிதாங்கூர் அரசி சேதுலட்சுமிபாய் ஆட்சியில் துவங்கி ஸ்ரீ சித்திர திருநாள் ராமவர்மா ஆட்சி காலத்தில் 1935 மார்ச் 2ல் பயன்பாட்டிற்கு வந்தது.
சிறப்பு
இந்த பாலம் தென்னிந்தியாவில் 'ஆர்ச்' வடிவில் கட்டப்பட்ட முதல் பாலமாகும். இடுக்கி மாவட்டத்தில் மலையோர பகுதிகளுக்கு நுழைவு பகுதியாக பாலம் உள்ளதால் 'ஹைரேஞ்ச் நுழைவு வாயில்' எனவும் அழைக்கப்படுகிறது.