கோடநாடு கொலை வழக்கு; இ.பி.எஸ்., சசிகலாவிடம் விசாரிக்க ஐகோர்ட் அனுமதி
கோடநாடு கொலை வழக்கு; இ.பி.எஸ்., சசிகலாவிடம் விசாரிக்க ஐகோர்ட் அனுமதி
ADDED : டிச 06, 2024 02:28 PM

சென்னை: 'கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், இ.பி.எஸ்., மற்றும் சசிகலா, அப்போதைய மாவட்ட எஸ்.பி., முரளி ரம்பா ஆகியோரை நீதிமன்றத்தில் விசாரிக்கலாம்' என சென்னை ஐகோர்ட் அனுமதி அளித்து உத்தரவிட்டது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் 2017ல் புகுந்த கொள்ளை கும்பல், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூரை கொலை செய்தது. இது தொடர்பாக சயான், வாளையார் மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜித்தின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் உள்ளிட்டோரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் எஸ்டேட் மேலாளரை மட்டும் விசாரிக்க, நீலகிரி நீதிமன்றம் அனுமதி அளித்து இருந்தது. ஆனால் எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., சசிகலாவை விசாரிக்க அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் சார்பில், இ.பி.எஸ்., சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க அனுமதி கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை இன்று(டிச.,06) நீதிபதி வேல்முருகன் விசாரித்தார். அப்போது அவர் கூறியதாவது: இ..பி.எஸ்., முதல்வராக இல்லாததால் எதிர்தரப்பு சாட்சியாக ஏன் விசாரிக்க கூடாது? இ.பி.எஸ்., மற்றும் சசிகலா, அப்போதைய மாவட்ட எஸ்.பி., முரளி ரம்பா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட வழக்கில் தொடர்புடைய அனைவரையும் நீதிமன்றத்தில் விசாரிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார். இ.பி.எஸ்., சசிகலாவை விசாரிக்க தடை விதித்த நீலகிரி நீதிமன்றத்தின் உத்தரவை, சென்னை ஐகோர்ட் ரத்து செய்து உத்தரவிட்டது.