கோடநாடு கொலை கொள்ளை வழக்கு: செப்.,27ம் தேதிக்கு ஒத்திவைப்பு
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு: செப்.,27ம் தேதிக்கு ஒத்திவைப்பு
ADDED : ஆக 30, 2024 12:18 PM

ஊட்டி: கோடநாடு கொலை கொள்ளை வழக்கு, செப்., 27ம் தேதிக்கு ஒத்தி வைத்து பொறுப்பு நீதிபதி உத்தரவிட்டார்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கொடநாடு கொலை கொள்ளை வழக்கு, ஊட்டி செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. இவ்வழக்கை விசாரித்து வரும் மாவட்ட நீதிபதி அப்துல் காதர் விடுப்பில் உள்ள நிலையில், குடும்ப நிலை நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் வாளையார் மனோஜ், நேரில் ஆஜரானார். அரசு தரப்பு வக்கீல்கள் ஷாஜஹான் மற்றும் கனகராஜ் ஆகியோர் ஆஜராயினர். மேலும், சி.பி.சி.ஐ.டி., ஏ.டி.எஸ்.பி., முருகவேல் தலைமையிலான, சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேரில் வந்தனர்.
பொறுப்பு நீதிபதி லிங்கம் முன்னிலையில், வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், இன்டர்போல் விசாரணை அறிக்கை இன்னும் வந்து சேரவில்லை எனவும், தற்போது நடந்து வரும் புலன் விசாரணை குறித்தும் நீதிபதியிடம் அரசு தரப்பு வக்கீல்கள் தெரிவித்தனர். அதனைக் கேட்ட நீதிபதி லிங்கம், வழக்கின் விசாரணையை, செப்., 27ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
அரசு தரப்பு வக்கீல் ஷாஜகான் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'கோடநாடு கொலை கொள்ளை வழக்கு, ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் நடக்கிறது. மாவட்ட நீதிபதி, வேறு அலுவல் காரணமாக இருந்ததால், பொறுப்பு நீதிபதி முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது.நீதிபதி விசாரிக்கும் போது, தற்போதைய நிலை குறித்தும், இன்டர்போல் அறிக்கை வந்து சேரவில்லை என்பது குறித்தும் தெரிவித்தோம். அதனை கேட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை, செப்., 27ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்' இவ்வாறு அவர் கூறினார்.