மதுரையில் கொட்டி தீர்த்த மழைமிதக்கும் குடியிருப்புகள்
மதுரையில் கொட்டி தீர்த்த மழைமிதக்கும் குடியிருப்புகள்
ADDED : அக் 27, 2024 06:56 AM

மதுரை: மதுரையில் நேற்று முன்தினம் கொட்டித்தீர்த்த கனமழையால், வைகை ஆற்றின் வட பகுதியில் உள்ள செல்லுார், நரிமேடு, பீபிகுளம், ஆனையூர், ஆத்திக்குளம், மீனாம்பாள் புரம், கூடல்புதுார், முல்லைநகர், மகாத்மா காந்தி நகர், சூர்யா நகர், பார்க் டவுன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் தத்தளிக்கின்றன.
நேற்று முன்தினம் அதிகபட்சமாக, 10 இடங்களில் கனமழை பெய்தது. மதுரை கிழக்கு, சிட்டம்பட்டியில் அதிகபட்சமாக ஒரே நாளில், 10.8 செ.மீ., மழை பதிவானது.
தொடர் மழையால் தண்ணீர் செல்ல வழியின்றி, பல குடியிருப்புகளிலும் ரோடுகளிலும் சூழ்ந்துள்ளது.
மதுரை மாநகராட்சி விரிவாக்க பகுதிகளில், நீர்ப்பாசன கண்மாய்களை ஒட்டி குடியிருப்புகள் பெருகிவிட்டன.
தண்ணீர் செல்ல வழியின்றி பல குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. மழை தொடர்ந்து பெய்ததால், தண்ணீர் வெளியேறாமல் தேங்கி நிற்கிறது.
மதுரையின் முக்கிய தேவை, செல்லுார் கண்மாய் பகுதியில், 'கட் அண்டு கவர்' எனப்படும் மூடு கால்வாய் அமைத்து, வைகை ஆற்றுக்கு தண்ணீரை திருப்புவதே. முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே தெரிவித்தபடி, இதற்கு நிதி ஒதுக்கினால், செல்லுார் பகுதி மழைக்காலத்தில் நிரந்தரமாக தப்பும்.
விரிவாக்க பகுதிகளில் பாதாள சாக்கடை அமைத்தும், அவை பயன்பாட்டிற்கு வராததால் மழை நீருடன், கழிவுநீரும் சேர்ந்து தெருக்களில் பாய்கிறது. இப்படியே சில நாட்கள் கழிவுநீர் தேங்கி நின்றால், நோய் பரவும் அபாயம் உள்ளது.