sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கோயம்பேடில் களேபரம் :ஆம்னி பஸ்களை கிளாம்பாக்கம் செல்ல நிர்பந்தித்ததால் அவதி

/

கோயம்பேடில் களேபரம் :ஆம்னி பஸ்களை கிளாம்பாக்கம் செல்ல நிர்பந்தித்ததால் அவதி

கோயம்பேடில் களேபரம் :ஆம்னி பஸ்களை கிளாம்பாக்கம் செல்ல நிர்பந்தித்ததால் அவதி

கோயம்பேடில் களேபரம் :ஆம்னி பஸ்களை கிளாம்பாக்கம் செல்ல நிர்பந்தித்ததால் அவதி

11


ADDED : ஜன 25, 2024 02:29 AM

Google News

ADDED : ஜன 25, 2024 02:29 AM

11


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை :கிளாம்பாக்கத்தில் இருந்து தான் தென்மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற புதிய அறிவிப்பு நேற்று முதல் அமலானது. தொடர்ந்து வழக்கம் போல இயக்கப்படும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அறிவித்திருந்த நிலையில், கோயம்பேடு உட்பட பல்வேறு இடங்களில் நேற்று மாலை முதல் தடை விதிக்கப்பட்டது. இதனால், கோயம்பேடு துவங்கி ஆம்னி பேருந்துகள் செல்லும் வழி நெடுகிலும்

பயணியர் கடும் அவதியை சந்தித்தனர்.

சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், துாத்துக்குடி, கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்ட பகுதிகளுக்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் 1,500க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம், டிச. 30ல் திறக்கப்பட்டது. ஆரம்பத்தில், இங்கிருந்து அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன.

நேற்று, 24ம் தேதி முதல் தென்மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளும் இங்கிருந்து தான் இயக்கப்படும் என, அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 'பேருந்துகளுக்கான நிறுத்தம், பணிமனை, அலுவலக வசதி போன்றவற்றை முழுமையாக செய்து தரும் வரை, கிளாம்பாக்கத்துக்கு மாற முடியாது' என, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் போர்க்கொடி துாக்கினர்.ஆனாலும், ஏற்கனவே அறிவித்த படி, 24ம் தேதி இரவு 7:00 முதல் சென்னைக்குள் பயணியருடன் ஆம்னி பேருந்துகள் அனுமதிக்கப்படாது என, போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டமாக அறிவித்தார். இதனால், பயணியர் மத்தியில் குழப்பம் நிலவியது.

நேற்று காலை முதல் மாலை வரை, ஆம்னி பேருந்துகளில் ஒன்று கூட, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வரவில்லை. மாலை 6:00 மணியளவில் முதல் ஆம்னி பேருந்து வந்த நிலையில், முன்பதிவு செய்திருந்த நான்கு பயணியரும் வரவில்லை.

இந்நிலையில், நேற்று மாலை அரசு உத்தரவை கண்டிப்புடன் அமல்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் ஓட்டுனர்கள், நடத்துனர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். மற்றொரு புறம், கோயம்பேடில் இருந்து செல்லும் வகையில் முன்பதிவு செய்திருந்த ஆயிரக்கணக்கான பயணியர் பேருந்து நிலையத்திற்கு வந்தனர். ஆனால், அங்குள்ள ஆம்னி பேருந்துகளில் ஏற அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆம்னி பேருந்து வளாகத்தில் தடுப்புகள் அமைத்து, போலீசார் அதிகளவில் வரவழைக்கப்பட்டனர். கோயம்பேடு வந்த பயணியரை தடுத்து நிறுத்தி கிளாம்பாக்கத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதற்காக, உதவி மையங்கள் திறக்கப்பட்டு, பயணியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கிருந்து கிளாம்பாக்கம் செல்ல மாநகர பேருந்துகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால், டிக்கெட் முன்பதிவு செய்த பயணியர் கடும் அவதிக்குள்ளாகினர்.

குழப்பமான சூழலில் அவதி


இது குறித்து, முன்பதிவு செய்த பயணியர் சிலர் கூறியதாவது: ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது குறித்து, எங்களுக்கு எந்த தகவலும் அளிக்கவில்லை. இங்கு வந்த போது கிளாம்பாக்கத்திற்கு செல்லும்படி போலீசார் தெரிவிக்கின்றனர். ஆனால், ஆம்னி பேருந்து தரப்பில் முன்கூட்டியே தகவல் எதுவும் கூறவில்லை. சில ஆம்னி பேருந்து நிறுவனத்தினர், கோயம்பேடில் வந்து ஏறிக்கொள்ளும் படி கூறினர். ஆனால், கோயம்பேடு வந்த போது, ஆம்னி பேருந்து நிலையத்திற்குள் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. இந்த குழப்பத்தில் என்ன செய்வதென தெரியாமல் கடுமையாக அவதிப்படுகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

சட்டப்படி நடவடிக்கை


இதற்கிடையே, தமிழக போக்குவரத்து ஆணையர் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: ஜன., 24 இரவு முதல் சென்னையில் இருந்து தெற்கு நோக்கி இ.சி.ஆர். சாலையில் செல்லும் ஆம்னி பேருந்துகளை தவிர, மற்ற அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கம் புதிய நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை மாநகருக்குள் பயணியரை ஏற்றுவதோ, இறக்குவதோ அனுமதிக்கப்படாது. இதை மீறி பயணியருக்கு உரிய தகவலை வழங்காமல், அவர்களை தேவை இல்லாமல் சிரமத்திற்கு உள்ளாக்கும் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் மீது மோட்டார் வாகன சட்டம் மற்றும் விதிகளின் படியும் மட்டுமல்லாமல், கிரிமினல் சட்டங்களின் படியும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டது.

முரண்டு பிடிக்கக் கூடாது


இந்தியாவில் மிகப்பெரிய பேருந்து நிலையங்களில் ஒன்றாக கிளாம்பாக்கம் முனையம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையத்தில் இருந்து பேருந்துகளை இயக்குவதற்கும், பயணியருக்கான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கோயம்பேடில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்குவதற்கு ஜன., 24ம் தேதி முதல் முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயக்கப்படும். ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு ஏற்றார் போல், அரசு செயல்பட முடியாது. மக்களுடைய தேவைகளுக்கும், விருப்பத்துக்கும் தான் அரசு செயல்பட முடியும். கிளாம்பாக்கம் முனையம் திறக்கப்படுவதற்கு முன்பே, இது தொடர்பாக ஆம்னி பேருந்து உரிமையாளர்களோடு கூட்டம் நடத்தி தகுந்த அறிவுரைகளை வழங்கி இருக்கிறோம். கடந்த மாதம் 30ம் தேதி முதலே அங்கிருந்து தான் ஆம்னி பேருந்துகள் படிப்படியாக இயக்கப்பட்டிருக்க வேண்டும். மீண்டும் அவர்கள் கால அவகாசம் கேட்டதால், ஜன., 24ம் தேதி இறுதி செய்யப்பட்டது. இப்போது, திடீரென்று முரண்படுகின்றனர்.

- சேகர்பாபு,சி.எம்.டி.ஏ., மற்றும் ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்

இணைப்பு பஸ் குளறுபடி


கோயம்பேடில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டது. ஆந்திரா மற்றும் பெங்களூரு செல்லும் ஆம்னி பேருந்துகளில் பயணியர் ஏறிச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

கோயம்பேடுக்கு வந்த பயணியர் கிளாம்பாக்கம் செல்ல, தடம் எண் : 70 வி பேருந்து மிகவும் குறைவாகவே இயக்கப்பட்டன. இப்பேருந்து வடபழனி, அசோக்நகர், பல்லாவரம், குரோம்பேட்டை வழியாக கிளாம்பாக்கத்திற்கு இயக்கப்பட்டது.

மிகவும் குறைவான எண்ணிக்கையிலும், தகுந்த முன்னறிவிப்பின்றி தாமதமாக நேற்று இரவு 8:45 மணியளவில் இணைப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில் முதல் பேருந்தே டயர் பஞ்சர் ஆகி பயணியரை அவதிக்குள்ளாக்கியது. இதையடுத்து பேருந்து நிலைய நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகளை பயணியர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கிளாம்பாக்கத்தில் இருந்து பேருந்துகளை இயக்கினால், போதுமான பயணியரை ஏற்ற முடியாது. கோயம்பேடில் இருந்து பேருந்துகளை இயக்கக் கூடாது என, மாலையில் தான் அரசு தரப்பில் தெரிவித்தனர். பொதுமக்களுக்காகத் தான் அரசும், நாங்களும் இருக்கிறோம். அவர்களை அலைக்கழித்து பயனடைய முடியுமா?

-சந்திரசேகர், 62, திருச்சி, ஆம்னி பேருந்து ஓட்டுனர்

தொடர்ந்து கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தையும் சேர்த்து இயக்குவதில் என்ன பிரச்னை. அரசு பேருந்துகளில் கூட்டம் இல்லை. இதனால் ஆம்னி பேருந்துகளை அடக்கிவிட்டு, அரசு பேருந்துகளை முழுமையாக இயக்க அரசு திட்டமிடுகிறது. எங்களை போன்ற நுாற்றுக்கணக்கான குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தை அரசு நசுக்குகிறது. இங்கிருந்து கிளாம்பாக்கத்திற்கு ஒரு பெண் தனியாக செல்ல முடியுமா. நாங்கள் போடும் ஓட்டு இனி பேசும்.

- எஸ்.ஷாம், 36, ஆம்னி பேருந்து ஏஜன்ட் அமைந்தகரை

பொங்கலுக்கு பின், கோயம்பேடில் இருந்து ஆம்னி இயக்கக்கூடாது என கடந்த ஆண்டு இறுதியிலேயே முடிவு எடுக்கப்பட்டிருந்தது. கிளாம்பாக்கத்தில் ஒரே நேரத்தில் 250 ஆம்னி பேருந்துகள் நிற்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போதும் கிளாம்பாக்கத்தில் போதுமான வசதி உள்ளது. கோயம்பேடில் உள்ளதை விட கிளாம்பாக்கத்தில் ஆம்னி பேருந்துகள் மற்றும் ஓட்டுநர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் உள்ளன. முடிச்சூரில் நடைமேடை வேண்டும் என கேட்டுக் கொண்டதால், 28 கோடி ரூபாய் செலவில், 5 ஏக்கரில் பணிகள் நடந்து வருகிறது. அது மார்ச் இறுதிக்குள் முடிந்து விடும்.

- அன்சுல் மிஸ்ரா,சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலர்

நீதிமன்றம் செல்ல முடிவு


அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் கூறியதாவது: சாதாரண நாட்களில் 700, வார இறுதி நாட்களில் 1,250, விடுமுறை மற்றும் பண்டிகை மற்றும் நாட்களில் 1,600 பேருந்துளை இயக்கி வருகிறோம். கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் 144 ஆம்னி பேருந்துகள் தான் நிற்க முடியும். கோயம்பேடு ஆம்னி நிலையத்தை உடனடியாக காலி செய்யும்படி கூறினால், எங்கு பேருந்துகளை நிறுத்துவது.

ஆம்னி பேருந்துகள் இயக்கத்தை இரண்டு நாட்களில் உடனே கிளாம்பாக்கத்திற்கு எப்படி மாற்ற முடியும். தைப்பூசம், குடியரசு தினம் என, தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை நாட்களில் மட்டும், 60,000 பேர், 90 நாட்களுக்கு முன்பிருந்தே முன்பதிவு செய்துள்ளனர். இந்த விடுமுறை நாட்களில் இது வரை இரண்டு லட்சம் பயணியர் முன்பதிவு செய்து இருக்கிறார்கள்.

ஆனால், இரண்டே நாட்களில், மாற்றியே தீர வேண்டும் என, ஏன் தீவிரமாக நடவடிக்கை எடுக்கின்றனர் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. அதனால் பயணியர் நலன் கருதி உடனடியாக தமிழக முதல்வர் தலையிட்டு இந்த பிரச்னைக்கு பேச்சு நடத்தி தீர்வு காண வேண்டும். இல்லையெனில், நீதிமன்றத்தை நாட உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us