கிருஷ்ணகிரி பாலியல் குற்றவாளி மரணம்: இபிஎஸ், அண்ணாமலை சந்தேகம்
கிருஷ்ணகிரி பாலியல் குற்றவாளி மரணம்: இபிஎஸ், அண்ணாமலை சந்தேகம்
ADDED : ஆக 23, 2024 04:48 PM
சென்னை: கிருஷ்ணகிரி பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சிவராமன் மற்றும் அவரது தந்தை மரணம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை ஆகியோர் சந்தேகம் எழுப்பி உள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கிருஷ்ணகிரி பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சிவராமன் மற்றும் அவரது தந்தை மரணங்கள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில், பாலியல் குற்றத்தில் தொடர்புடைய முக்கிய புள்ளிகளின் பெயர்களை சிவராமன் சொல்லிவிடுவாரோஎன்ற அச்சத்தில் அவர் கொல்லப்பட்டு இருக்கலாமே என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
பல சந்தேகங்களுக்கு விடை அளிக்கக்கூடிய சிவராமன், தற்கொலை செய்தது பெரும் சந்கேத்தை எழுப்பி உள்ளது. உண்மை குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சிக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் மக்களிடையே எழுகிறது. சிறப்பு புலனாய் குழு முழுமையான விசாரணை நடத்தி உண்மையான விடைகளை வெளிக் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில், சிவராமன் இந்த பாலியல் குற்றத்தில் தொடர்புடைய வேறு யாரேனும் முக்கிய புள்ளிகளின் பெயர்களை வெளியில் கூறிவிடுவாரோ என்ற அச்சத்தில், சிவராமன் கொல்லப்பட்டு இருக்கலாமோ என்ற கேள்வி எழுகிறது. உண்மையில் இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு உள்ளனரா? அல்லது யாரையோ காப்பாற்றும் முயற்சியாக, தந்தை, மகன் இருவரின் மரணங்களும் நிகழ்ந்துள்ளனவா என்ற பலத்த சந்தேகம் எழுகிறது இது தொடர்பாக விசாரணை நடத்தி உண்மையான பதில்களை வெளிக் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

