கூடங்குளம் இரண்டாவது உலை 2 மாதங்கள் உற்பத்தி நிறுத்தம்
கூடங்குளம் இரண்டாவது உலை 2 மாதங்கள் உற்பத்தி நிறுத்தம்
ADDED : அக் 30, 2025 01:20 AM
சென்னை: திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில், மத்திய அரசுக்கு, கூடங்குளம் அணுமின் நிலையம் உள்ளது. அங்கு தலா, 1,000 மெகா வாட் திறனில், இரு அணு உலைகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
இதிலிருந்து தமிழகத்துக்கு, தினமும் 1,152 மெகா வாட் மின்சாரமும், மீதி மின்சாரம் பிற மாநிலங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மின்சாரம், தமிழக மின் தேவையை பூர்த்தி செய்வதில், முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்நிலையில், கூடங்குளம் மின் நிலைய இரண்டாவது அணு உலையில், எரிபொருள் நிரப்பும் பணிக்காக இம்மாதம், 27ம் தேதி மாலை முதல், இரு மாதங்களுக்கு மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. முதல் அணு உலையில் வழக்கம் போல், மின் உற்பத்தி செய்யப் படுகிறது.
இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தமிழகத்தில் மழை சீசன் துவங்கியுள்ளதால், மின் தேவை குறைந்துள்ளது. இதனால், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து முழு மின்சாரம் கிடைக்கவில்லை என்றாலும், மின் தேவையை பூர்த்தி செய்வதில் சிரமம் இல்லை' என்றார்.

