தகவல் ஆணைய உத்தரவை மதிக்காத தாசில்தாருக்கு ரூ.25,000 அபராதம்
தகவல் ஆணைய உத்தரவை மதிக்காத தாசில்தாருக்கு ரூ.25,000 அபராதம்
ADDED : அக் 30, 2025 01:20 AM
சென்னை: தகவல் ஆணைய உத்தரவை மதிக்காத தாசில்தாருக்கு, 25,000 ரூபாய் அபராதம் விதித்த மாநில தகவல் ஆணையம், அந்த தொகையை, மனுதாரருக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
வேலுார் மாவட்டம், வேலுார் தாலுகா, சின்ன அல்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் காதர். இவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், 2021ம் ஆண்டில் சில தகவல்களை கோரி, வேலுார் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அவர்கள் முழு தகவல் வழங்கவில்லை.
இதை எதிர்த்து, அவர் மாநில தகவல் ஆணையத்தில் மேல் முறையீடு செய்தார். இதை விசாரித்த ஆணையம், முழுமையான தகவல்களை, ஒரு வாரத்திற்குள் வழங்கும்படி, வேலுார் தாலுகா பொது தகவல் அலுவலருக்கு உத்தரவிட்டது.
அதை ஏற்று மனுதாரருக்கு தகவல் வழங்கப்பட்டதாக, பொது தகவல் அலுவலர் ஆணையத்துக்கு தெரிவித்தார். ஆனால், பொது தகவல் அலுவலர் அளித்தது, தவறான தகவல் என, மனுதாரர் மீண்டும் ஆணையத்தில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக, சமீபத்தில் நடந்த விசாரணையில், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே, மனுதாரரும், தற்போதைய பொது தகவல் அலுவலரான, வேலுார் தாலுகா தலைமையிடத்து துணை தாசில்தார் நித்யாவும் ஆஜராகினர்.
இரு தரப்பையும் விசாரித்த, மாநில தலைமை தகவல் ஆணையர் முகம்மது ஷகீல் அக்தர் பிறப்பித்த உத்தரவு:
பொது தகவல் அலுவலர் வழங்கிய தகவலில், மனுதாரர் கோரிய விபரங்களுக்கு, சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் மாநகராட்சியை அணுகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் கோரிய மனுதாரரை, மற்ற துறைகளை அணுகுமாறு தெரிவிப்பதை ஏற்க முடியாது.
ஆணையத்தின் உத்தரவை மதிக்கவில்லை என்பது, இதன் வாயிலாக தெளிவாகிறது. எனவே, ஆணைத்தின் உத்தரவை மதிக்காத, பொது தகவல் அலுவலர், 25,000 ரூபாயை மனுதாரருக்கு இழப்பீடாக வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

