திருச்சி விமானத்தில் உயிர் தப்பிய 144 பயணியர் விபத்தை தவிர்த்த விமானிக்கு பாராட்டு
திருச்சி விமானத்தில் உயிர் தப்பிய 144 பயணியர் விபத்தை தவிர்த்த விமானிக்கு பாராட்டு
UPDATED : அக் 12, 2024 01:35 AM
ADDED : அக் 12, 2024 01:33 AM

திருச்சி:திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளின் ஷார்ஜா நகருக்கு, நேற்று மாலை 5:40 மணிக்கு விமானம் புறப்பட்டபோது, அதில் பயணித்த 144 பேரும், மகிழ்ச்சியில் திளைத்தனர்!
ஏ.எக்ஸ்.பி., 613... ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்!
கிளம்பிய சில நிமிடங்கள் நிம்மதியாக சென்றது. ஆனால், பைலட்டுக்கு மட்டும் ஏதோ நெருடல்... 'என்னது... ஏதோ இடறுதே... சக்கரங்களுக்கு என்னாச்சு...' என மானிட்டரைப் பார்த்தார்... ரன்வே சக்கரங்கள் எதுவும் உள்ளிழுத்துக் கொள்ளப்படவில்லை... அதிர்ச்சி!
விமான பைலட் குழு, ஒரு மணி நேரம் போராடியது. 'இனிமேலும் பயணியருக்குச் சொல்லவில்லை எனில் ஆபத்து' என விவாதித்து, ஒரு வழியாக அறிவிப்பு வெளியிட்டது.
மகிழ்ச்சியில் பலரும், துாக்கத்தில் சிலரும் திளைத்திருந்த நேரத்தில், இந்த அறிவிப்பால் அனைவரும் பீதியில் உறைந்தனர்!
மனம் படபடவென அடித்துக் கொள்ள, பலப் பல சிந்தனைகள் ஓடத் துவங்கின.
'சக்கரம் வெளியேவே நீட்டிக்கிட்டிருந்தா, தரையில் 'சர்ர்ர்...'ரென தேய்ச்சிக்கிட்டா, நெருப்பு கிளம்புமே...' என அனைவரும் மாறி மாறி பேசிக் கொள்ள, பலரும் கடவுளை வேண்டிக் கொள்ளத் துவங்கினர்.
'நாம பொறப்டப்ப மாரியம்மனை வேண்டிக்கிட்டம்பா... ஒண்ணும் ஆகாது...' என்று ஒருவர்; 'பொறப்டப்ப அங்கே இருந்த கோவிலுக்குப் போகச் சொன்னாங்க... அட போப்பான்னு சொல்லிட்டு நடந்தேன்... ஆஞ்சநேயர்ன்னு சொன்னாங்க... போனேன்... நல்லபடியா ஷார்ஜால இறங்கணும்ன்னு வேண்டிக்கிட்டேன்... அலட்சியப்படுத்தினேனே...' என அங்கலாய்த்த மனம் ஒன்று...
விமான குழு யோசித்தது... 'பியூயல் தீர்ந்து போகும் வரை சுத்த வேண்டியது தான்... எங்கே தரை இறக்கலாம்... திருச்சியில இறக்கினா தான், 'சேப் லேண்டிங்' தான்... சென்னை...? மதுரை...? வேண்டாம்... திருச்சி தான் சேப்...' என முடிவு செய்து, வானில் வட்டமிடத் துவங்கினர்.
இரவு 8:30 மணிக்கு ஷார்ஜா சென்றடைந்திருக்க வேண்டும். பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஐந்து மணி நேரம் பறக்கக் கூடிய அளவில் எரிபொருள் உள்ளது. வட்டமிட முடிவு செய்தார் விமானி.
நிற்க...
புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தமலை, அன்னவாசல், விராலிமலை, இலுப்பூர் ஆகிய பகுதிகளிலும், திருச்சி மாவட்டம் மணப்பாறை, குளத்துார், கரூர் மாவட்டம், தோகைமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள், 'உய்... உய்...' என சத்தமிட்டபடி வானில் ஒரு விமானம் சுற்றிச் சுற்றிப் பறப்பதைப் பார்த்து, அதிர்ச்சியில் உறைந்தனர்.
'என்னாச்சு... போர் துவங்கிடிச்சா... நம்ம ஏரியாவுக்கு ஏன் வந்தாங்க... சாதா விமானம் போல தானே தெரியுது... குண்டு கிண்டு விழுந்துருமோ...' என அண்ணாந்து பார்த்தபடி, வீதிக்கும், வீட்டுக்குமாக அலைந்து திரிந்தனர். டின்னர் சாப்பிட முடியவில்லை.
'டிவி'யைப் பார்த்த பிறகு தான், சற்றே சுதாரித்தனர், அது சாதா விமானம் தான் என்று!
திருச்சி மக்கள், விமான நிலையத்தை நோக்கி படையெடுக்கத் துவங்கினர். விமான பயணியரின் உறவினர்கள் கதறத் துவங்கினர்.
விமான நிலையத்தில்இருந்து ஆபத்து ஏதும் நிகழாது என்ற தகவல் சொல்லபட்டாலும், யாராலும் நிம்மதியாக இருக்க முடியவில்லை.
இரவு, 8:00 மணிக்கு, 'இன்னும் சற்று நேரத்தில் விமானம் தரையிறங்க உள்ளது' என்ற தகவல் கிடைத்தது. 'எப்படி இறங்கப் போகிறதோ தெரியவில்லையே... தீ பிடிச்சிடிச்சுன்னா என்ன செய்யிறது...' என தமிழகத்தைச் சேர்ந்த அனைவருக்குமே பீதி.
பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. 18 ஆம்புலன்ஸ்கள், 20 டாக்டர்கள், 100க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் அடங்கிய குழுவினரும் விமான நிலையத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.
இரவு 8:15க்கு மெதுவாக விமானம் தரையிறங்கத் துவங்கியதும், விமான நிலையத்திலும், 'டிவி'யிலும் பார்த்தபடி இருந்த அனைவரின் கண்ணும் அதன் மேலேயே... பத்திரமாக, மிக மிக பத்திரமாக, விமானத்தை விமானி தரையிறக்கினார்... மெதுவாக புகை கிளம்பத் துவங்கியது... ஆனால், சற்று நேரத்தில் அடங்கியது.
'அப்பாடா... தேங்க்ஸ் டு த பைலட்... தப்பிச்சோமே...' என பயணியர் அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்; அனைவருக்கும் மகிழ்ச்சி!
விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய பைலட் மற்றும் விமான தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு பயணியர் மற்றும் உறவினர்கள் நன்றி தெரிவித்தனர். முதல்வர் ஸ்டாலின் விமானியைப் பாராட்டினார்.
நடந்தது என்ன? வானில் திக் திக்...
திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து 144 பேருடன், மாலை 5:40 மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஷார்ஜா புறப்பட்டது
வானில் ஏறிய சில வினாடிகளில், விமானத்தின் சக்கரங்கள் உள்ளிழுத்துக் கொள்ளாததை உணர்ந்தார் விமானி
தொடர்ந்து இயக்கினால் ஆபத்து என உணர்ந்த விமானி, விமானத்தை திருச்சியில் தரையிறக்க முடிவு செய்தார்
ஐந்து மணி நேரம் தொடர்ந்து பறக்க தேவையான எரிபொருள் இருந்ததால், அதை காலி செய்ய முடிவு செய்தார் விமானி
திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் 26 முறை வட்டமிட்டது விமானம்; எரிபொருள் எரிக்கப்பட்டது
தரையிறங்க தயாரானதும், திருச்சி விமான நிலையத்திற்கு வந்தது விமானம். இரவு 8:15க்கு பத்திரமாக தரையிறங்கியது.

