குமரிஅனந்தனுக்கு மூச்சுத்திணறல்; மருத்துவமனையில் அனுமதி
குமரிஅனந்தனுக்கு மூச்சுத்திணறல்; மருத்துவமனையில் அனுமதி
ADDED : மார் 18, 2025 06:56 AM

சென்னை : தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தனுக்கு, திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், அப்பல்லோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
குமரிஅனந்தன், நாளை 93வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். அவர் வயது முதிர்வு காரணமாக, வேலுார் மாவட்டம், குடியாத்தம் காக்காத்தோப்பில் அமைந்துள்ள, அத்தி இயற்கை, யோகா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு, டாக்டர்கள் கண்காணிப்பில் இருந்தார்.
அவரது மகளும், தெலுங்கானா மாநில முன்னாள் கவர்னருமான தமிழிசை, அவரது கணவர் டாக்டர் சவுந்திரராஜன் ஆகியோர் நேரில் சந்தித்து, உடல்நலம் குறித்து விசாரித்து, அவருக்கு தேவையான சிகிச்சையை வழங்கினர். சில தினங்களுக்கு முன், அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது.
வேலுாரில் உள்ள நருவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து, அவர் மேல் சிகிச்சைக்காக, சென்னை வானகரத்தில் உள்ள, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.