ADDED : ஆக 09, 2025 01:49 AM

சென்னை:நாகாலாந்து மாநில கவர்னர் இல.கணேசன், 80, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
நாகாலாந்து கவர்னராக இருந்தாலும், அவ்வப்போது சென்னையில் உள்ள அவரது இல்லத்திற்கு வந்து தங்குவது வழக்கம்.
சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில், நீரிழிவு நோயால் பாதத்தில் ஏற்பட்ட புண்ணுக்கு சிகிச்சை பெற்றார். பின், வீட்டில் ஓய்வில் இருந்த போது, கடந்த 5ம் தேதி, கால் மரத்துப் போன நிலையில் மயங்கி விழுந்தார்.
இதன்பின், நேற்று அதிகாலை, 3:00 மணியளவில் தலைச்சுற்றல் மற்றும் வாந்தி உணர்வு ஏற்பட்டதால், சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவ பரிசோதனையில், தலையில் ரத்தக்கட்டு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. அதற்கான அறுவை சிகிச்சை முடிந்த நிலையில், தீவிர கண்காணிப்பு பிரிவில் இல.கணேசன் உள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் விரைவில் நலம் பெற்று, மீண்டும் நல்ல உடல் நிலைக்கு திரும்ப வேண்டும்' என்று கூறியுள்ளார்.
அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன், 'இல.கணேசன் பூரண குணமடைந்து, விரைவில் வீடு திரும்ப, எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்' என, தெரிவித்துள்ளார்.

