ADDED : டிச 26, 2024 01:35 AM
சிவகங்கை: தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர், கள்ளக்குறிச்சி, நீலகிரி, திருப்பூர், நாமக்கல், திண்டுக்கல், அரியலுார் உட்பட 11 மாவட்டங்களில், புதிதாக அரசு மருத்துவக் கல்லுாரிகளை 2022ம் ஆண்டு பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இந்த மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனைகளில், 11,200 மருத்துவ வல்லுனர்கள், பணியாளர் பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டு, 1.5 கோடி மக்களுக்கு சிகிச்சை கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
ஆனால், இந்த புதிய மருத்துவக் கல்லுாரிகளில், இதய நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்கான அடிப்படை வசதிகள் இருப்பதில்லை. இதய சிகிச்சைக்கு, முக்கியமான ஆஞ்சியோகிராம் சோதனை வசதி இந்த மருத்துவக் கல்லுாரிகளில் இல்லை.
ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், இதற்கு முன் துவக்கப்பட்ட சிவகங்கை நோயாளிகள், மதுரை அரசு மருத்துவமனைக்கு தான் செல்ல வேண்டியுள்ளது.
சில மருத்துவமனைகளில் எக்கோ பரிசோதனை செய்வதற்கு இயந்திரம் இருந்தும், டாக்டர் இல்லாத நிலை உள்ளது.
எனவே, தமிழக அரசு அனைத்து மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளிலும் ஆஞ்சியோகிராம் வசதி செய்து, அதற்கான நிபுணர்களையும் பணியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.