பருமன் மற்றும் மூட்டு வலி பிரச்னைக்கு உடல் உழைப்பு இல்லாதது முக்கிய காரணம்
பருமன் மற்றும் மூட்டு வலி பிரச்னைக்கு உடல் உழைப்பு இல்லாதது முக்கிய காரணம்
ADDED : மே 21, 2025 01:54 AM

சென்னை:'இந்தியாவில் ஆறு லட்சம் இளைஞர்கள் எலும்பு தேய்மானத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதற்கு, உடல் உழைப்பு இல்லாதது, உடல் பருமன் போன்றவையே முக்கிய காரணம்' என, அப்பல்லோ டாக்டர்கள் தெரிவித்தனர்.
அப்பல்லோ மருத்துவ குழுமம் சார்பில், சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட மருத்துவமனைகளில், 'அப்பல்லோ மூட்டு பாதுகாப்பு திட்டம்' நேற்று துவக்கப்பட்டது.
இத்திட்டத்தை, தமிழ்நாடு ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் செந்தில்நாதன் துவக்கி வைத்து பேசியதாவது:
ஒரு வேகப்பந்து வீச்சாளர், வேகமாக ஓடி வந்து பந்தை வீசும்போது, அவரின் உடல் எடையை விட, ஏழு மடங்கு எடை மூட்டுக்கு அழுத்தம் கொடுக்கும். எனவே, மூட்டு பாதுகாப்பு திட்டம், அனைத்து கிரிக்கெட் வீரர்களுக்கும் மிகவும் உதவியாக இருக்கும். இனி எந்த விதமான மூட்டு சார்ந்த பிரச்னைகளுக்கும், 'பி.சி.சி.ஐ.,' வெளிநாடுகளை அணுக வேண்டிய தேவை இருக்காது.
இவ்வாறு அவர் பேசினார்.
எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள், அருண் கண்ணன், கோசிகன், நாவலடி சங்கர் ஆகியோர் கூறியதாவது:
மூட்டு வலி என்பது இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை, பொதுவான விஷயமாக உள்ளது. உடலுக்கு ஓய்வு கொடுத்து, மருந்துகள் உட்கொண்ட பிறகும், மூட்டு வலி குணமாகவில்லை என்றால், டாக்டரை அணுக வேண்டும். எதனால், மூட்டு வலி ஏற்பட்டிருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள, எக்ஸ் - ரே, எம்.ஆர்.ஐ., பரிசோதனை செய்வது அவசியம்.
ஆரம்ப நிலையிலேயே, பாதிப்பை கண்டறிந்தால், அறுவை சிகிச்சை இல்லாமல், பிசியோதெரபி, மூட்டுக்கு போடும் சில ஊசிகள், அவர்களின் குருத்தெலும்பு, எலும்பு மஜ்ஜை, ரத்த செல்கள் உள்ளிட்ட சிகிச்சைகளாலும் சரி செய்ய முடியும். எல்லா மூட்டு வலியும், தேய்மானத்தால் மட்டும் வருவதில்லை.
போதிய உடற்பயிற்சி இல்லாதது, உடல் பருமன் போன்றவற்றாலும், மூட்டு வலி ஏற்படும். குதித்து, நடந்து எலும்புக்கு செயல்பாடுகள் கொடுத்தால், அதன் வளர்ச்சியும் ஆரோக்கியமாக இருக்கும். உலக மக்கள் தொகையில், 3 சதவீத மக்களும், இந்தியாவில், ஆறு லட்சம் இளைஞர்களும், மூட்டு பிரச்னையால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
முதுகுவலி, கழுத்து, தோள்பட்டை வலி அதிகரித்து வருவதற்கு, அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து படிப்பது, கணினி பயன்பாடு போன்றவை முக்கிய காரணம். அவ்வப்போது சாய்ந்து உட்காருவதுடன், நடப்பதும் அவசியம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.