வீட்டுமனை விற்பனையில் வெளிப்படைத்தன்மை இல்லையே; வீட்டுவசதி வாரியம் மீது குற்றச்சாட்டு
வீட்டுமனை விற்பனையில் வெளிப்படைத்தன்மை இல்லையே; வீட்டுவசதி வாரியம் மீது குற்றச்சாட்டு
ADDED : டிச 02, 2025 06:31 AM

மதுரை: தமிழக அரசு வீட்டுவசதி வாரியம்சார்பில் வீடு இல்லாதோருக்கு வீட்டு மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகம் முழுவதும் விற்பனையாகாத வீடுகளுக்கும் விண்ணப்பங்களை பெறுகின்றனர். மதுரையை பொறுத்தவரை தோப்பூர், உச்சபட்டி, எல்லீஸ் நகர், தத்தனேரி பகுதிகளில் வீட்டு மனை விற்பனைக்கான பணிகள் நடக்கின்றன.
காரணமின்றி நிராகரிப்பு வீட்டுமனை விற்பனையில் குறைந்த, நடுத்தர, உயர் வருமான பிரிவு என்ற அடிப்படையில் விண்ணப்ப கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. முதலில் வருவோருக்கு முன்னுரிமை உண்டு. வெளிப்படைத் தன்மைக்காக, ஆன்லைன் மூலம் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்கின்றனர். தகுதியான விண்ணப்பங்களை பொது இடத்தில் வைத்து ஆன்லைன் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கின்றனர்.
விண்ணப்பதாரர் ஒருவர் கூறியதாவது: தேர்வு செய்யப்படுவோர், முன்பணத்தை ஆன்லைன் மூலமே செலுத்த முடியும் என்றநிபந்தனையால் எளிய மக்கள் வீடு பெறும் வாய்ப்பு குறைகிறது. விதிமுறை பின்பற்றாத, உரிய ஆவணங்கள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன. நிராகரிக்கும்போது அதற்கான காரணத்தை விண்ணப்பதாரர்களுக்கு வீட்டு வசதி வாரியம் தெரிவிப்பது இல்லை.
அதனால் ஆன்லைனிலும் நிராகரிப்பு காரணத்தை அறிய முடிவதில்லை. குறைபாடுகள் இருந்தால் விண்ணப்பதாரர்களுக்கு தெரிவித்து மீண்டும் அதனை பதிவேற்றம் செய்யலாம் என்பதே நடைமுறை. ஆனால் வீட்டுவசதி வாரியம் இதை கடைபிடிப்பதில்லை. இதனால் வெளிப்படைத் தன்மையும் கேள்விக்குறியாகிறது என்றார்.
வீட்டுவாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ''ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை தொடக்க நிலையில் தான் உள்ளது. இந்த ஆண்டு செப்டம்பர் முதலே இதற்கான குறைகளை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம். விரைவில் பொதுமக்களின் குறைகள் சரிசெய்யப்படும்'என்றார்.

